முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் இன்று 272 பொதுமக்கள் படுகொலை; பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

28 04 2009
28_01முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

 

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 மணியளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது நடத்தின.

பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியவாறே முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.

இத் தாக்குதல்களில் பொதுமக்களுக்கு அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8:30 மணி வரையிலான காலப்பகுதியில் மட்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் எட்டுத் தடவைகள் இப்பகுதிக்கு வந்து கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மக்கள் பெருமளவுக்கு செறிவாக வசிக்கும் பகுதிகளை நோக்கி நடத்திச் சென்றுள்ளன.

இதன் பின்னரும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுளளன. இந்தத் தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் பெரும் தொகையான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படை கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் முப்படைகளும் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வலைஞர்மடம் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் பொதுமக்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும்  எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் வான் தாக்குதல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் 12:50 மணியளவிலும் பின்னர் 1:10 மணியளவிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்தார்.

“அனைத்துலக சமூகத்தை குறிப்பாக தமிழ்நாட்டை ஏமாற்றும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்கின்றது” எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்

28_012

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

28_03





இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வருத்தமடைவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

28 04 2009
p_nadesan1இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு, முன்னெடுப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் வழி செவ்வியிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
‘ இந்தியா அவர்களின் உண்மையான நண்பனை அடையாளம் காணமல் மட்டுமின்றி, தமிழீழ மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

‘இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு யுத்ததிற்கான அனைத்து வகையான யுத்த ஆயுதங்களையும் இந்தியா வழங்கி வருகிறது” எனவும் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் பொருட்டும், யுத்த நிறுத்தம் குறித்தும் இந்திய மத்திய அரசாங்கம் எந்தவிதமான அர்த்தபுஷ்டியான செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகியோர், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யுத்தம் குறித்து மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே துரதிஸ்ட வசமாக பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினர் குண்டுத்தாக்குதல் நடத்தினர். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,

‘ உண்மையில் படையினரே இவ்வாறு பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். பொது மக்களை முன்னிறுத்தியே அவர்கள் தமது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பொதுமக்கள் செறிந்துள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர்” என அவர் பதிலளித்துள்ளார்.

சர்வதேச சமூகம், வன்னி நிலவரத்தின் உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. எனினும் பொது மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் தற்போது மெதுவாக விழிப்படைந்து வருகின்றமையை காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘ அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும் வரையில், தற்போதய நடப்பு நிலைக்கு முடிவு வரப் போவதில்லை. தமிழ் மக்கள் சுய நிர்ணயத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை எட்டும் பொருட்டே தமிழீழத் தலைவர் பிரபாகரனும் போராடி வருகிறார்.

இதன் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இருக்கின்றனர், இதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே, பொது மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள இந்த நிலையில், அனைத்துலக சமூகம் அக்கறையுடன் இது தொடர்பில் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் மீது அதீத அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.





ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்: நிபந்தனை ஜாமீனில் நேற்று விடுதலையாகிய இயக்குனர் சீமான்

28 04 2009
semaan10இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை  ஆதரித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து சிறைவாசம் அனுபவித்த இயக்குனர் சீமான் நேற்று நிபந்தனை  ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

 

இதைத்தொடர்ந்து  நேற்று பிற்பகலில் ஜெயிலைவிட்டு வெளியே வந்த இயக்குனர் சீமானை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அவர் நேராக அரியாங்குப்பம் வந்தார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம். ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம்.

இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.

காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம்.

இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரசாரம் தொடங்குவேன்.

இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.