வன்னியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது படையினர் தாக்குதல்:

8 04 2009
po_011வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான ஆட்லறி, கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களிலேயே குறித்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிந்திய தகவல்களின்படி கொல்லப்பட்ட பொதுமக்களின்  25 சடலங்கள் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 13 சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்.

இதேவேளை இன்று புதன்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் வன்னிப் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் 100 க்கு அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 422 க்கு அதிகமான பொதுமக்கள் காயமடைந்துமள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் கடந்த திங்கட்கிழமை 43 பேர் கொல்லப்பட்டும் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை 21 பேர் கொல்லப்பட்டும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவர்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உயிரிழந்த பொதுமக்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. 

எனினும் இந்தத் தரவுகளின் அடிப்படையில் வைத்து ஆராய்ந்து பார்க்குமிடத்து இன்றைய சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த, படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. 





இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்:

8 04 2009
defending-the-03இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..

இலங்கையின் 58வது இராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.

இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய இராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை இராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.

சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கூட புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் உயிரிழந்த சுமார் 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரஙகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை இராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.