கடும் சமரில் 500 படையினர் பலி; 600 க்கு மேற்பட்டோர் படுகாயம்

19 04 2009
ltte_rpg_teamமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக – விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றி இரட்டைவாய்க்கால் சந்திக்குள் நுழைய சிறிலங்காப் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பீரங்கிகள், கனரக சுடுகலன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றை பக்க பலமாகக்கொண்டு முன்னேற முனையும் சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு, தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் சமரில் – இதுவரை – ஆகக் குறைந்தது 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 வரையானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் – காயமடைந்தோரில் பெருமளவிலான படையினர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன





பிரபாகரனுக்கு முடிவு கட்டும் காலம்

19 04 2009
mahinda20raபிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கப் படையினர் மிக விரைவில் முடிவு கட்டிவிடுவர்.எமது இராணுவத்தினர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பர்; அல்லது அவருக்கு விரைவில் முடிவு கட்டுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பிரபாகரனுக்கு கடைசி அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். என்று ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பேட்டியில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

அரசாங்கம் வழங்கிய 48 மணி நேர தாக்குதல் இடைநிறுத்த காலத்தை பிரபாகரன் தக்கவாறு பயன்படுத்தவில்லை. தமிழ்ப் பொதுமக்களைப் தனது “மனிதக் கேடயங்களாகப்” பயன்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எஞ்சியுள்ள அவரது சகாக்களுக்கும் இராணுவத்திடம் சரண் அடைவதற்கு 48மணி நேர அவகாசம் வழங்கியிருந்தேன். அத்தோடு, 17 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் பொதுமக்களை விடுக்குமாறும் அவரிடம் கேட்டிருந்தேன்.

அவர் அரசாங்கப் படைகளிடம் சரண் அடையவுமில்லை; தான் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்த பொதுமக்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கு அனுமதிக்கவும் இல்லை. அதனால் அவரை இராணுவ ரீதியாக கையாள வேண்டிய நிலை மட்டுமே எமக்கு எஞ்சியுள்ளது.

இன்றைய நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டை நாசத்தின் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்த விடுதலைப்புலிகள் சயினட்டை விழுங்கி தற்கொலை செய்வதா அல்லது முல்லைத்தீவு நீரேரிக்குள் பாய்ந்து தற்கொலை செய்வதா என்பதனை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது என்றார்.





இடம் மாற்ற தீர்மானம்

19 04 2009
lttelogoதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்தை மலேசியாவில் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளை அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ள்ஸ் அன்ரனி, சொர்ணம் மற்றும் ஜெயம் ஆகிய விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் ஏற்கனவே மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தலைமையகத்தை நிறுவி தாய்லாந்து மற்றும் கம்போஜியாவின் உதவியுடன் மீண்டும் ஈழ யுத்தத்தை தொடர புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் அண்மையில் மலேசியாவிற்கு விஜயம் செய்து குமரன் பத்மநாதனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டுக்கான இலங்கை பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.