பிரபாகரன் தப்பினார்

5 04 2009

புதுக்குடியிருப்பு பகுதியில்
ராணுவ முற்றுகையில் இருந்து பிரபாகரன் தப்பினார்
குண்டு துளைக்காத கார் சிக்கியதாக அதிகாரி தகவல்

கொழும்பு, ஏப்.5-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மன் ஆகியோர் பதுங்கி இருந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட செல்வதற்கு முன்பாக அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றனர். மேலும், புதுக்குடியிருப்பு அருகே குண்டு துளைக்காத சொகுசு கார் பிடிபட்டதாக ராணுவம் தெரிவித்தது.

 குளிர்சாதன சொகுசு பங்களா

இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. தற்போது, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, விசுவமேடு உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப்புலிகள் உள்ளனர். பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் அங்குதான் இருப்பதாக ராணுவம் கூறி வருகிறது.

இந்த சூழ்நிலையில், புதுக்குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் சிறிது இடத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அப்போது ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியபோது குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு பங்களா கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகே குண்டு துளைக்காத சொகுசு கார் ஒன்றும் அனாதையாக நின்றது.

பிரபாகரன் கார்

இது குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், “புதன்கிழமை அன்று, ஒரு சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அங்கு இருந்த ஒரு பங்களா அருகே குண்டு துளைக்காத சொகுசு கார் பிடிபட்டது. அந்த காரை, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சொந்தமாக பயன்படுத்திய தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அந்த கார் தவிர, எரிந்த நிலையில் மேலும் 4 கார்களும் அந்த பங்களா அருகே பிடிபட்டன. அந்த கார்கள் அனைத்துமே விடுதலைப்புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் பயன்படுத்தியவை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவம் முற்றுகை

இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் கடைசி புகலிடமான புதுக்குடியிருப்பில் பிரபாகரன் மற்றும் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பதுங்கி இருந்த இடத்தை இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவு முற்றுகையிட்டது. ஆனால், ராணுவம் முற்றுகையிடும் முன்பாகவே அவர்கள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள 58-வது படையின் கமாண்டோ அதிகாரி பிரிகேடியர் சவிந்திரா டிசில்வா, “புதுக்குடியிருப்பில் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட செல்லும் முன்பாகவே அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். தற்போது நடைபெற்று வரும் போரில் விடுதலைப்புலிகளின் படைகளுக்கு பொட்டு அம்மனே தலைமையேற்று நடத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றால் கைது

முன்னதாக பிரபாகரனும், அவரது மூத்த மகன் சார்லஸ் அந்தோணியும் புதுக்குடியிருப்பில் உள்ள ஆழமான பதுங்கு குழிகளில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் நடந்த தாக்குதலில் சார்லசுக்கு காயம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. சண்டை நடைபெறாத பகுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பதுங்கு குழிகளில் இருந்து எப்போதாவது வெளியே வந்து, பொது மக்களுடன் நேரடியாக பேசுவதையும் பிரபாகரன் வழக்கமாக வைத்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாட்டுக்கு பிரபாகரன் தப்பி சென்று இருக்க கூடும் என்ற தகவலை விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் மறுத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தனியாக அரசியல் கட்சி நடத்தி வரும் கருணா கூறுகையில், “இந்தியாவுக்கு பிரபாகரன் தப்பித்து சென்றால், அங்கு அவரை கைது செய்து விடுவார்கள்” என்றார்.

அதுபோல டக்ளஸ் தேவானந்தா கூறும்போது, “இலங்கையில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று இருக்கவே முடியாது. வன்னி பகுதியில் உள்ள வெவ்வேறு பதுங்கு குழிகளில் மாறி மாறி பதுங்கி வருகிறார்” என்றார்.

நன்றி : தின தந்தி
பதிப்பு : தமிழன் மணியன்