இன்று காயமடைந்த 43 பொதுமக்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதி: வன்னியில் உணவுப் பொருட்கள் விலை உச்சம்

14 04 2009

vanni12பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி வரை 43 பொதுமக்கள் காயங்களுடன் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் படையினரின் நேற்றைய தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் (வயது 44) ஒருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை மட்டும் பிற்பகல் 3.00 மணிவரை பாதுகாப்பு வலய பகுதிகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட 240 வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனால், அங்குள்ள மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சில கடைகளே இருப்பதாகவும் அவற்றில் – ஒரு கிலோ அரிசி 300 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 350 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், வெங்காயம் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும், பால் மா பக்கட் ஒன்று (400 கிராம் நிறையுடையது) 2200 ரூபாவுக்கும், மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் 10 நாட்களுக்கு முன்னர் ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன என்றும், அடுத்த உணவுக் கப்பல் இன்னும் ஒரு வாரத்தின் பின்பே புதுமாத்தளன் பகுதிக்குச் செல்லும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள மக்கள் உயிர்வாழ்வதற்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, வன்னிப் பிரதேச பாதுகாப்பு வலய பிரதேசத்தில்,புதுவருடப் பிறப்பு தினமாகிய இன்று கஞ்சி வாங்குவதற்கு முண்டியடிக்கும் சிறுவர்களையும் அவர்களின் அவலங்களையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.

vanni1221

vanni13