7 நாட்களாக கடும் சமர்:

31 03 2009
புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக கடும் சமர்: 1400 க்கு மேற்பட்ட படையினர் பலி; 6000 க்கு மேற்பட்டோர் காயம்
skanthapuram_fightingமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாக எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புச் சமர்களில் இதுவரை 1400 க்கு மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6,000 க்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான் குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா படையினர் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளுடன் கடும் சமர்: அரசின் பொய் பிரசாரம் என புலிகள் அறிவிப்பு

31 03 2009
 lttelogo2முல்லைத்தீவு மாத்தளன் பகுதியிலிருந்து 4 படகுகளில் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடற்படையினர் அதனை புலிகளுடனான சமர் என பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நேற்று அதிகாலை வேளையில் மாத்தளன் பகுதியிலிருந்து பொதுமக்கள் 4 படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கையில் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவற்றில் இரு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய கடற்படையினர் அதனை விடுதலைப்புலிகளின் சடலங்கள் என பொய்கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் மீது தாக்குதலை நடாத்திவிட்டு விடுதலைப் புலிகளுடன் கடும் சமர் இடம்பெற்றதாக அரச ஊடகங்களில் உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கடற்படைப் பேச்சாளர் வெளியிட்டுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளார்கள்





தற்காலிகமாக தக்குதலை நிருத்துவதற்கு இலங்கை உடன்பாடு.

30 03 2009

விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் பெரும் இழப்புக்களை வன்னிப் பகுதியில் சந்தித்து வரும் ராணுவத்தினரை ஒருநிலைப்படுத்துவதற்கும் புலிகளிடம் அடியாக இடியைவாங்கி கலங்கி மரண பயத்தில்  நிற்கும் ராணுவத்தினரின் மனநிலையை மாற்றுவதற்கே இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு ராணுவத்தினர் வந்துள்ளனர் என்று ஈழதேசம்.காம் பாதுகாப்பு ஆய்வாளர் கருதுகிரார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது…

வன்னியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கும் அவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்குமே இந்த தற்காலிக தாக்குதல் நிருத்தம் என்று போகொல்லாகம தெரிவித்துள்ளர்.

இது உலகநாடுகளின் இலங்கை மீதான அளுத்தத்தை குறைப்பதற்கே இந்த உடன்பாட்டை இலங்கை அரசு எடுத்துள்ளது அனால் இந்த உடன்படிக்கையை இலங்கை அரசு கடைபிடிக்குமா என்பது சந்தேகம்,தொடர்ந்தும் மக்கள் மீது தாக்குதலை நடத்தலாம்.





முல்லைக் கடற்பரப்பில் பெருஞ்சமர் : ஒரு கடற்படை வீரர் பலி

30 03 2009
navy004முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே கடற்சமர் இடம்பெற்றுள்ளதாகப் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற கடற்சமரில் 24 விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாகவும், கடற்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் கடற் படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸாநாயக்க தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

அத்துடன் கடற்படையின் இச்சமரின் போது விடுதலைப் புலிகளின் 4 படகுகளை தாக்கியழித்துள்ளதாகவும், ஒரு கடற்படை வீரர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இந்தச் சமர் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எதுவித கருத்தும் இது வரை தெரிவிக்கவில்லை.





இராணுவ முன்னெடுப்புகள் தொடர்பாக செய்திகள்:

30 03 2009
 defence_bஇராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது.
இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.கடந்த இரண்டு மாதங்களில் இந்த இரண்டு இணையத்தளத்தினாலும் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் படி, 835 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இதேகாலப்பகுதியில் 1174 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ இணையத்தளதைவிட பாதுகாப்பு செய்தி இணையத்தளம் 41 சதவீத அதிகரித்த அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு ஊடகங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், எண்ணிக்கை ரீதியான இந்த பாரிய வேறுபாடு, மோதல்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டு வரும் பொய் பிரசாரத்தினை காட்டி நிற்கிறது.

அத்துடன் பாதுகாப்பு செய்தி இணைத்தளத்தினால் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ‘இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக” கூறப்பட்டிருக்கும்.

ஆனால் இராணுவ இணையத்தளத்தின் ஒரு அறிக்கையிலேனும், குறிபார்த்து அல்லது இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்காது.

அத்துடன், இராணுவ இணையத்தளம் தமது அறிக்கைகளில், குறிப்பிட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும்.

எனினும் பாதுகாப்பு இணையத்தளம், அந்த குறிப்பிட்ட சம்பவத்தில் 5 அல்லது 10 விடுதலைப் புலி உறுப்பினர்களேனும் கொல்லப்பட்டதாகவே சுட்டிக்காட்டியிருக்கும்.

இந்த அதிகரித்த எண்ணிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், இந்த அறிக்கைகளை எழுதுபவர்கள் சுயமாக கதைகளை தோற்றுவிக்கின்றமையினையும், புதிதாக சொல்ல கதைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் பழைய கதைகளையே மீள சுழற்றுவதும் நிரூபணமாகிறது.

எவ்வாறாயினும், இந்த தகவல்களை பிரயோகிக்கும் மக்கள், ஏமாற்றப்படுகின்றனர் என்பதே உண்மை.





அழுவதா … சிரிப்பதா

29 03 2009

ஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்:

 in_army0வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200  இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த செய்தியை கேட்டு அழுவதா ..சிரிப்பதா என்று தெரிய வில்லை
ஒரு இந்தியனாக அழுவதா
இல்லை தமிழனாக சிரிப்பதா
என்று எனக்கு தெரிய வில்லை

 





தப்பியோடும் படையினர்

29 03 2009
016முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது யுத்த டாங்கி (Tank)  ஒன்று விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர்யுத்த டாங்கிகள்  சகிதம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முன்நகர்வும் முறியக்கப்பட்டது.

இம் முறியடிப்புச் சமரில் படையினரின் யுத்த டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.

அதன் அறிகுறியாக விடுதலைப்புலிகள் இரவு நேரத்தில் ஊடுருவித் தாக்கி விடலாம் என்ற அச்சத்தில் சிங்களப் படைகள் தங்கள் முன்னணி நிலைகளைச் சுற்றி மின் விளக்குகளை பொருத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் முல்லைத்தீவு நகர காப்பு நிலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் 59 டிவிசனின் துருப்புக்கள் பலர் தற்போது தப்பியோடுவதாகவும் கடந்த 27 ஆம் நாள் வரையுமான ஒரு மாதத்தில் மட்டும் அந்த டிவிசனில் இருந்து குறைந்தது 100 படையினர் வரை தப்பியோடியுள்ளதாகவும் நம்பகமான உள்ளகத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஏனைய சிங்களப் படையினரின் டிவிசன்களில் இருந்து தப்பியோடுவோர் தொகையும் இந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் அது குறித்த சரியான தொகை விபரங்களைப் பெற முடியவில்லை.

நன்றி : தமிழ் வின்
பதிப்பு : தமிழன் மணியன்




புலிகளே மக்கள்! மக்களே புலிகள்!

28 03 2009
male20forcesஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக்கொள்ள முடியாது. இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். உனது வேதனை வரிகளை விமர்சிக்க முடியாது. ஆனாலும் கூட ஒருசில நெருடல்கள் என் மனதைத் துண்டுகளாக உடைத்துத் தூங்கவிடாமல் பண்ணியது.
ஐந்து வேளையும் இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்ப் பட்டியல் பார்ப்பது நீ மட்டுமல்ல… வன்னி மண்ணில் இருக்கும் தங்கள் பெற்றோரை, சகோதர-சகோதரிகளை, உறவுகளை எண்ணி உணவு இறங்காமல் நடைப் பிணமானவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.உன் அம்மம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு உன் பதின் பருவத்துக் கடைசி வயதுகளில், ‘பொடியள் மறுபடி பிடித்த ஆனையிறவில்’ உன் வீடு பார்க்க நீ போன தருணத்தில், இராணுவக் காலணிகள் சூழ்ந்த யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் நான் விம்மலையும் வேதனைகளையும் தொண்டைக்குழிக்குள் தேக்கிவைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தேன்.

தன் பதின் கடைசி வயதுகளில் போராளியாகிய என் தம்பி, அதே ஆனையிறவுச் சமரில் படுகாயமடைந்து மரணப் படுக்கையில் கிடப்பதாக, என் அம்மா முல்லைத்தீவிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார். அதே ஆனையிறவுத் தளத்தின் வெற்றி விழாவில் மக்கள் கலந்து மகிழும்போது, நீ சொன்ன கிரிக்கெட் ஸ்கோரின்படி 400 வீடுகளில் பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள் (என் தம்பி பிழைத்துக்கொண்டான்).

எங்கள் மக்களின் துயரங்களை வெளியில் கொண்டுவரும் உன் படைப்பு உன்னதமானதுதான். அப்பாவிப் பொதுமக்களையும், பச்சிளம் பாலகர்களையும் படுகொலை செய்யும் போர் எனும் அரக்கனின் பிடியில், எங்கள் மக்கள் மரணத்தின் முன் மண்டியிட்டுக்கிடக்கிறார்கள் என்பதை வெளி உலகம் கண்டும் காணாமல் இருக்கும். உண்மைதான் சகோதரா, ஆனாலும்கூட வெளி உலகம், பொதுமக்கள் – போராளிகள் என்று பிரித்துப் பார்ப்பதைப் போலவா நீயும் பார்க்கிறாய்?

உன்னை நேசித்த காயத்திரி தன் மண்ணை நேசித்து நஞ்சு மாலை சூடிக்கொண்டதுகூட அவளின் வீரச்சாவின் பின்னர்தான் உனக்குத் தெரிய வந்ததா சகோதரனே? ‘துவக்குப் பிடித்தவன் மரணத்தை நிச்சயித்துக் கொண்டவன். யுத்த முனையில் களமாடுபவனின் உயிர் என்பதும் துப்பாக்கிக் குண்டு போல ஓர் ஆயுதமே’ என்று இரட்டை வரிகளில் அந்நியப்படுத்திவிட்டாயே? அவர்கள் என்ன பிறக்கும்போதே தாய், தந்தை, குடும்பம் ஏதும் இல்லாமல் கழுத்தில் குப்பியும் கையில் குண்டுமாகப் பிறந்தார்களா?

மருத்துவப் பீடத்துக்குத் தெரிவாக வேண்டும் என்ற கனவுடன் படித்தவன் என் கடைசித் தம்பி. தனது எதிர்காலப் படிப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே பள்ளியில் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் படையில் சேர்ந்து கொண்டவன். அதே முதலுதவிப் படை, அவனை மானிப்பாயில் இராணுவம் நிகழ்த்திய ‘முன்னேறிப் பாய்ச்சல்’ நடவடிக்கையில் காயம் அடைந்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தியது.

வீட்டிற்குத் திரும்ப வந்தவன், ‘எத்தனை குழந்தைகளைத் தூக்கினேன் தெரியுமா? எத்தனை பிணங்களைத் தூக்கினேன் தெரியுமா? கையைக் கழுவக் கழுவ இரத்தம் ஒட்டியிருக்கிறது’ என்று அரற்றிக் கொண்டு இருந்தான். அடுத்த மாதமே வீட்டைவிட்டுப் போய்விட் டான். நீ சொன்னபடி துவக்கு தூக்கிக்கொண்டு மரணத்தை நிச்சயித்துக்கொண்டான்.

தனது பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் என்று கனவு கண்ட என் பெற்றோர், கடைசிப் பிள்ளை கனவைக் கலைத்தாலும், மற்றைய மூவரும் ஈடு செய்வார்கள் என்றிருந்தார்கள். அவர்களது கனவைத் திரும்பச் சிதறடித்துவிட்டு, 95-ல் யாழ் மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தபோது, எனது அடுத்த தம்பியும் தன் தம்பியின் தடம் ஒற்றிப் போய்விட்டான்.

இவர்கள் மரணத்தை நிச்சயித்துக் கொண்டார்கள் என்று நாங்கள் தண்ணீர் தெளித்து விடவில்லை சகோதரா! அவர்கள் களமுனையில் நிற்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் செத்துப் பிழைக்கும் வாழ்வை வாழ்பவர்கள். பாம்பு கடித்து இறந்தாலும், பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு இறந்தாலும், களத்தில் வீர மரணம் என்றாலும், இழப்பு தரும் வலி, இருப்பவர்களுக்கு ஒரே மாதிரியானதுதான். வலி தரும் உணர்வுகள் மட்டுமே வெவ்வேறானவை.

என் கடைசித் தம்பியின் வீர மரணச் செய்தி கேட்டுக் கதறித் துடித்தபோது, கட்டிப் பிடித்து அழுவதற்கு அவன் உடல் கூடக் கிடைக்கவில்லை. சட்டம் இடப்பட்ட புகைப்படமே மிச்சம் இருந்தது எங்களுக்கு.

இவர்கள் வலுக்கட்டாயமாகப் போரில் நுழையும் சண்டியர்கள் அல்ல; காலம்காலமாகப் போர் எங்களில் திணிக்கப்பட்டது. இயக்கத்துக்காரியான உனது மச்சாளின் பேச்சு குறைந்திருந்தது என்று எழுதி இருந்தாய். தயவுசெய்து இப்படி எழுதுவதன் மூலம் அவர்களை இரும்பு மனிதர்கள் என்று உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிவிடாதே!

அவர்கள் அன்பானவர்கள்; கலகலப்பானவர்கள். அடுத்தவன் அழிவைப் பார்த்தே, ‘ஐயையோ’ என்று பதறி ஆயுதம் எடுத்தவர்கள். யார் அழிந்தாலும் எனது வாழ்வு, எனது படிப்பு, எனது உயிர் முக்கியம் என்று கடக்க முடியாதவர்கள்.

இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதாக எழுதி இருந்தாய். கனடாவில் இருந்து நானும் அதையே செய்கிறேன், சகோதரா! சிறிய வித்தியாசம். நெஞ்சுக்குழிக்குள் ரயில்கள் தடதடக்க, மாவீரர் பட்டியலில் அடுத்த தம்பியின் பெயர் உள்ளதா என்று பார்க்கும் கணப் பொழுதுகளும் மிகக் கொடுமையானவை.

அதில் அவன் பெயர் வரவில்லை என்று உணர்ந்து வரும் அந்தச் சிறு நிம்மதியை, அதில் உள்ள மற்றைய பெயர்கள் எல்லாமே என் சகோதரச் சகோதரிகளாக மாறி அடித்துச் செல்ல, எஞ்சி நிற்கும் வெறுமை ஆளையே கொல்லும்.

பொதுமக்கள் இறந்தாலோ, காயப்பட்டாலோ, பெயர் விவரம் எங்களை உடனே வந்து சேரும். போராளிகள் இறந்தால்கூட, தாமதமாக என்றாலும் பட்டியல் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், காயம் அடைந்து விழுந்துகிடக்கும் போராளிகளின் பெயர் எந்தப் பட்டியலிலும் வராது சகோதரா!

எங்கள் போராளிகள் வெற்றி பெறும்போதெல்லாம் முழு நீள அக்ஷன் திரைப்படம் பார்ப்பது போல், நீ சொன்னது போல்… கனவுகளைத் தின்னும் கற்பனைக் குதிரைகளில் தொலைவுகளைக் கடந்துவிட்டு, இப்போது கிளைமாக்ஸ் பிடித்தபடி அமையாத போது… இது சரிப்பட்டு வராது, என் உறவுகள் என்னுடன் இருந்தால் போதும் என்று வாழ்பவர்கள் – புலம் பெயர் மண்ணிலும் வாழ்கிறார்கள்; வன்னி மண்ணிலும் வாழ்கிறார்கள்.

அது போலவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கட்டாயத்தினால், போராட்டத்தில் இருந்தும் நாட்டில் இருந்தும் வெளியேறிவிட்டு, ‘ஐயோ! இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளதே, கடல் கடந்து, கண்டம் கடந்து ஈழம் போய்ச் சேரமாட்டோமா?’ என்று மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கில். அதன் வடிவமாகத்தான் இலட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், ஐ.நா. வாசலில் தீயூட்டிச் செத்துப் போனான்.

எங்களை விட்டுவிடு. புலம் பெயர்ந்து வந்தாலும் எங்கள் வாழ்வுகள் ஈழத்தில் புதையுண்டு கிடக்கின்றன. ஈழத்தில் எம் மக்கள், கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதைக் கண்டு மனம் வெதும்பித் தன்னைத் தீயிட்டு, இந்த அவலத்தை உலகறிய வைத்தானே முத்துக்குமார், அவன் எந்த கிளைமாக்ஸை எதிர்ப்பார்த்திருந்தான்?

அவனைத் தொடர்ந்து எத்தனை பேர்? இவர்களின் குடும்பங்களையும் எமது நாட்டின் போர் முத்தமிட்டுச் சென்றுள்ளதே! இவர்களின் இழப்புக்கு எதனை ஈடுவைக்கப் போகிறோம் நாம்?

தான் இறந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் வாழ வேண்டும் என்று கரும்புலியாய் செல்லும் எங்கள் வீரனின் தியாகத்துக்கும், தான் இறந்தாலும் பரவாயில்லை, ஈழத் தமிழன் வாழ வேண்டும் என்று தன்னை அழித்த முத்துக்குமாரின் தியாகத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.

”எங்கள் இனிய உறவுகளே, எங்கள் மக்கள் அழிந்துகொண்டு இருப்பதைப் பார்த்து அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனாலும், மேலும் மேலும் முத்துக்குமாரைப் பின்பற்றுபவர்களைப் பார்த்துக் கை தொழுது கேட்கின்றோம். சாவில் எழுதிய ஜாதகங்கள் எங்களுடையதாக இருக்கட்டும். மரணத்தின் வாசனை உங்கள் வாசலுக்கும் வருவதைப் பார்த்திருக்க எங்களால் முடியவில்லை. எங்கள் வரலாறு இரத்தத்தால் வரையப்படுகிறது. அதற்குத் தீச் சுவாலைகளால் சட்டம் இடாதீர்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது.

”உதிரியாகத் தீக்குளித்துச் சாவதை விடுத்து ஒன்றுபடுங்கள் மக்களே! ஈழத் தமிழனைக் காக்க என்று தினம்தோறும் புதிது புதிதாக அமைப்புகள் தொடங்குகிறார்கள் அரசியல்வாதிகள். எதற்கு இத்தனை அமைப்புகள்? மக்களே, உங்கள் போராட்டம் தவறான பாதையில் போகவிடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் அத்தனை கட்சிகளையும் அணி திரட்டுங்கள் என்று வேண்டுகிறேன் நான் – தமிழகத்து உறவுகளை!’

‘புலம் பெயர் நாடுகளில், பயங்கரவாதம் என்று தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிக் கதைக்காமல், உங்கள் கவன ஈர்ப்பை நடத்துங்கள்’ என்றார்கள். நாங்களும் செவி சாய்த்தோம். எங்கள் போராட்ட உணர்வை, தமிழீழ உணர்வை ஒதுக்கிவைத்து, மக்கள் அழிவதை மட்டும் எடுத்துக் காட்டினோம். அவர்களோ, மக்களை வெளியேற்றி இராணுவத்திடம் கொடுத்துவிட்டு, இனி புலிகளை அழியுங்கள் என்று சொல்ல ஆசைப்பட்டார்கள். ஆசைப்படுகிறார்கள்.

நாங்கள் விழித்துக் கொண்டோம். இப்போது ‘புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள்’ என்ற போராட்டத்தை அங்கீகரி’ என்றே போராடுகிறோம். உன் எழுத்துக்களும் இதையே செய்யட்டும், சகோதரா! அவர்களின்றி நாங்கள் இல்லை. நாங்கள் இன்றி அவர்கள் இல்லை. இதை உலகுக்கு உணர்த்து!

015

 

 

 

 

 

 

 

 

 

 

024

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி : தமிழ் வின்

பதிப்பு : தமிழன் மணியன்




“தேர்தலுக்குள் தீர்த்துக் கட்டு!”

26 03 2009
dmk-150x1501ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!’ என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ”சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள ராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, ‘வெற்றி… வெற்றி!’ என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.
இந்திய ராணுவமோ… சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய ராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய ராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, ‘இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!’ என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார்.
அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், ‘இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!’ என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார். சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர், ‘வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன…’ என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ‘ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!’ என பகிரங்கக் குற்றம் சாட்டினார். இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன…” எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.
”சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு ‘தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!’ என உத்தரவிட்டிருப்பதால், இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், ‘நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!’ என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, ‘போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!’ என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம்.
 இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!” என வேதனைப்பட்டார்கள்.
தமிழ் ஆர்வலர்களோ, ”கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்… அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. ‘அடுத்து நாம் வருவோமோ… மாட்டோமோ…’ என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!” என குமுறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் அரசோ, ”இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!” என்கிறது.
மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் ‘நிரந்தர அமைதி’யோ?




விடுதலைப்புலிகள் தாக்குதல்

26 03 2009

கொழும்பு, மார்ச்.26-

புதுக்குடியிருப்பு போர்க்களத்தில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் மீது விடுதலைப்புலிகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

உச்சகட்ட போர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது.

இந்தப்போரில் முக்கிய திருப்பு முனையாக, விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவரும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவருமான பொட்டு அம்மானின் வீட்டை ராணுவம் கைப்பற்றியது. இரணபாலை என்ற இடத்தில் விடுதலைப்புலிகளை ராணுவம் தேடிச்சென்ற போது இந்த விட்டை ராணுவ வீரர்கள் கண்டு பிடித்தனர்.

1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரனுடன், பொட்டு அம்மானும், இந்திய அரசால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பி ஓட்டம்

பொட்டு அம்மானின் வீட்டை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவு நேற்று கைப்பற்றிய போது அங்கு யாரும் இல்லை. பொட்டு அம்மானும், அவருடன் இருந்த துணை தளபதியான கபில் அம்மானும் மற்றவர்களும் ராணுவம் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்று ராணுவம் தெரிவித்தது.

மிகவும் பாதுகாப்பாக கடப்பட்டுள்ள அந்த வீட்டைச்சுற்றி, குண்டுகள் துளைக்காதபடி மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டு, வீடு வெளியே தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டின் உள்பக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, நவீனமாக இருந்தது.

ஜீப்-கண்ணி வெடிகள்

ராணுவம் தொடர்ந்து நடத்திய தீவிர வேட்டையில், பொட்டுஅம்மானின் வீட்டுக்கு அருகே இருந்து ஒரு ஜீப்பையும் கைப்பற்றியது. அது பொட்டு அம்மான் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். அந்த ஜீப்பின் வெளிப்பகுதி குண்டுகள் துளைக்க முடியாதபடி இரும்பு தகடுகளால் பாதுகாப்பு திரை போல அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய தீவிர சோதனையில் ஏராளமான கண்ணி வெடிகளையும் கைப்பற்றினார்கள்.

ஹெலிகாப்டர்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையே திரிகோணமலையின் கிழக்கு பகுதியில் நெல்வயலில் காவலுக்கு இருந்த 5 விவசாயிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்திப்பிரிவு தெரிவித்து உள்ளது. விடுதலைப்புலிகள்தான் அப்பாவி மக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அந்த செய்திப்பிரிவு தெரிவித்து உள்ளது.

முல்லைத்தீவு போர்க்களத்தில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது, நேற்று விடுதலைப்புலிகள் தரையில் இருந்து வானத்தில் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்தது. ஆனாலும் விமானிகள் இந்த தாக்குதலில் இருந்து தப்பி, காயம் அடைந்த வீரர்களை பத்திரமாக சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்ததாக விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நானயக்கரா தெரிவித்தார். அரசாங்கம் அறிவித்த போர் நிறுத்தப்பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புத்தேடி 1386 பேர் தஞ்சம்

முல்லைத்தீவு பகுதியில் இரணபாலை, அண்டம்புரம் ஆகிய இடங்களில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரிடம், அடைக்கலமும் பாதுகாப்பும் தேடி நேற்று 1386 அப்பாவி மக்கள் வந்து சேர்ந்ததாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது. கடந்த 3 மாதங்களாக, போர் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிடாதபடி அவர்களை விடுதலைப்புலிகள் போர் கேடயமாக பயன்படுத்தி வந்ததாகவும், அவர்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பி வந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.