காசிஆனந்தன்கவிதைகள்!!!

13 06 2012

வான் முகிலே! -காசி ஆனந்தன்

இடிக்கின்றாய்…. வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?
சிரிக்கின்றாய்…மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?ஓடிப்போ…!ஓடிப்போ…!
புதுக் கவிதை

வான்முகிலே….ஓவென்று

முழக்கமிட்டுப்

பாடிப்போ! அதிரட்டும்

மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

செருக்களம் வா! -காசி ஆனந்தன்

மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்புசிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்…..
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

குமுறி எழடா! -காசி ஆனந்தன்

உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்…
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?மேடைத் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந் நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங் கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்!
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா…. விடுதலை பிறக்கும்.

பாவலரே! -காசி ஆனந்தன்

பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்….
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்… கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்…. மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்… ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்… பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!

தோழரே! -காசி ஆனந்தன்

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி….தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி…

தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி…

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

முரசொலி-காசி ஆனந்தன்

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்கு முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

தோழி -காசி ஆனந்தன்

நானோர் கனாக்கண்டேன் தோழி! – தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! – அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! – இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! – தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!ஈழத்தில் சிங்களம் என்றார்! – தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் – இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் – என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி – வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!வீண் சண்டை போட்டதும் இல்லை! – தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் – தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் – இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! – பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! – அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் – தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! – அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி – தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

புகழ்பாடு-காசி ஆனந்தன்

களமெனில் முழங்கிவரும் ஏறு! – தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! – தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு!
மானமே தமிழனுயிர் அங்கம்! – தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! – தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்
தமிழன் உடற்குருதி சூடு! – தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? – தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

போர் முரசு!-காசி ஆனந்தன்

தவளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? – நாலுகவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? – வீட்டுச்சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? – தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! – உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! – வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! – தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் – புகழ்
பேண மறந்துவிட்டோம்! – இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! – பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! – இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! – அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? – எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? – அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? – அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!

தாயே!-காசி ஆனந்தன்

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்
என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே
உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!
கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்
நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது
தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!
வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்….
வீரமேன் கொடுத்தாய் தேவி?
பாரம்மா…..முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்துசேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே
பாரம்மா….மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை….வீதி
ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!
மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!
தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!
ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!
ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!

கடலே!-காசி ஆனந்தன்

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்…
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

நறுக்குகள் – புரட்சி-காசி ஆனந்தன்

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

நறுக்குகள் – ஏழ்மை-காசி ஆனந்தன்

சதை பிடித்து
விடுகிறாள்
அழகு
நிலையத்தில்
எலும்புக் கைகளால்.

நறுக்குகள் – குப்பைத் தொட்டி-காசி ஆனந்தன்

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -குப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -அலுவலகம்.




கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் – 2

5 03 2012

1.மாடு

 

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுகிறது…

கொம்பை
மறந்த
மாடு.

 

2.அறுவடை

 

திரைப்படச்
சுவரொட்டியைத்

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.

 

3.புரட்சி 

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்!

 

4.விளம்பரம் 

விளம்பரம்.

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை…

தொலைக்காட்சியில்!

 

5. மந்தை

 

மேடை

“தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ”
என்றேன்.

கை
தட்டினான்!

 

6.கண்ணோட்டம்

 

செருப்பைப்
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!





கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்

5 03 2012

 

1. மனிதன்

 

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

‘பசு பால் தரும்’
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.

இப்படியாக
மனிதன்…

2. இலக்கியம்

 

களத்தில்
நிற்கிறேன்…

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!

3. மானம்

 

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…

அம்மணமாகவே
போராடு..!





கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது?

4 12 2011

kalaignar_cartoon-300x2981

கனிமொழியின் விடுதலையே தமிழ் இனத்தின் விடுதலையாக கருதி மகிழ்ந்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியை நினைத்து நினைத்து இந்த மேடையில் ஏறினேன். அதன் காரணமாக, உங்களுக்கு வணக்கம் சொல்லக் கூட வார்த்தை வரவில்லை.

கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனதுமே, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் குலோப் ஜாமுனும் ஜாங்கிரியும் கொடுத்து கட்சியினர் கொண்டாடுகிறார்களே. இதை யாராவது தடுத்திருக்க வேண்டாமா?

கனிமொழி தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்த கொடுமையை கண்டித்து சிறைக்குப் போனாரா? இல்லை மத்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்து சிறைக்கு போனாரா?

உலகத்தையே உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டில், ஏ-2 அதாவது இரண்டாவது குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது முறையா? என்பதை தி.மு.க. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கோர்ட்டு விசாரணைகளில் பங்கேற்றுவிட்டு வரும் டிசம்பர்DSC_0212a 2ம் தேதியான வெள்ளிக்கிழமை மாலை அல்லது டிச.3ம் தேதியான சனிக்கிழமை காலையில் தான் சென்னை திரும்புகிறார்.

டெல்லியிலிருந்து அவரை அழைத்து வர துரைமுருகன் தலைமையிலான குழுவை நேற்று இரவே அனுப்பி வைத்துவிட்டார் தி.மு.க. தலைவர். வெள்ளிக்கிழமை மாலை வரும் கனிமொழிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவர் வந்ததும் ஓரிரு மாதங்களில் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒரு பதவியைத் தரப்போகிறார்கள். இதில் மாற்றமில்லை.

ஆனால் கலைஞர் என்ன சொல்கிறார், “ சிறையிலிருந்து வெளியே வரும் கனிமொழிக்கு பதவி கிடைக்குமா ?”என்று நிருபர்கள் கேள்வி கேட்டால், “ நான் சர்வாதிகாரி இல்லை. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே, கனிமொழிக்கு பதவி அளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும்”. அந்தக் கட்சி எது என்பது தான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வி.அடடா… அடடா… கட்சியை கேட்டா தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சராக்கினீர்கள்?கட்சியை கேட்டா, கனிமொழியை எம்.பி.யாக்கினிரீகள்?

kani-888bகட்சியை கேட்டா, அழகிரியை எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து மத்திய அமைச்சராக்கினீர்கள்?

அட… கட்சியை கேட்டா மந்திரி சபையிலிருந்து தூக்கிய டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தீர்கள்?அட… கட்சியை கேட்டா துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்துக் கொண்டு நீங்களே வைத்துக் கொண்டீர்கள்.அட… கட்சியை கேட்டா பா.ம.க. கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்தீர்கள். கல்யாண பத்திரிகை வைக்க வந்த ராமதாஸை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு… இப்படி அரசியல் செய்வதற்கு பெயர் என்ன?“நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” – இன்னும் எத்தனை காலம் தான் இந்த வார்த்தை ஜாலங்களை சொல்லி கட்சியை நடத்தப் போகிறீர்களோ தெரியவில்லை.

duraimurugan_845525eசரி.. போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

சிறையில் இருக்கும் போதே கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு, கனிமொழிக்கு பதவியளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும் என்று கருணாநிதி கதைக்கிறார் என்றால் யாராவது நம்புகிறீர்களா?

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது தெரியுமா? அதில் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

கட்சியின் பெயர்: க.க.ரா.மு.க.

கனிமொழிக்கு பதவி தரும் கட்சியில் மூன்றே மூன்று உறுப்பினர்கள் தான். ஒருவர் கருணாநிதி இரண்டாவது ராசாத்தி, மூன்றாவது கனிமொழி.

என்னது கட்சியின் பெயர் புரியவில்லையா?

கருணாநிதி கனிமொழி ராசா(த்தி) முன்னேற்றக் கழகம்.

இப்படியே இருங்க. கட்சி கட்சி சூப்பராக இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த கொடுமை என்றால், டெல்லியில் இன்னும் கொடுமையான காட்சிகளை காணலாம்.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் கூட்டம். இதில், சிதம்பரம் “வயதானவர்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” அதே கூட்டத்தில் ராகுல் பேசும்போது அரசியலில் தான் மிகப்பெரிய ஊழல் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு ஈடுபடுவது மூலம் ஊழலை ஒழிக்க முடியும்” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா, கனிமொழி, ஷரத் குமார், கரீம் மொரானி, ஆஸிஃப் பல்வா,ramadoss_and_karuna சாஹித் பல்வா ஆகியோர்களை பார்த்த பிறகு கூட ராகுல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று நம்புகிறாரா?

இன்று மாலை முதலமைச்சர் ஜெயலலிதா கவர்னரை சந்திக்கிறார். உடனே அமைச்சரவை மாற்றம் என்று யாரும் கருதிவிட வேண்டாம். மூன்று மாத காலம் ஊட்டியில் தங்கியிருப்பது குறித்து தகவல் கொடுக்கவே கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா பார்க்கிறார்.

நன்றி! வணக்கம்!





பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சொக்கனுக்கு விழுந்த அடி

4 12 2011

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சொக்கனுக்கு விழுந்த அடி போல மக்களுக்கு அடி விழுந்திருக்கிறது. 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அப்போதும் சொன்னது “கஜானா காலி” என்பதுதான்.   உடனே தமிழினத் தலைவர் நான் கஜானாவை காலியாக வைத்திருந்தாலும், அரிசியாக கிடங்குகளை நிரப்பியிருக்கிறேன் என்றார்.  ஜெயலலிதா உடனே, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்றார். விழுப்புரம் உணவுக் கிடங்கில் நுழைந்த திமுக எம்எல்ஏ பொன்முடி, நிருபர்களை அழைத்துச் சென்று, இது புழுத்த அரிசி அல்ல….  என்று கூறினார்.  உடனே, ஜெயலலிதா, லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க கட்டளையிட்டார்.

கஜானா காலி என்பதை மீண்டும் வலியுறுத்திய ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது.   அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார்.    அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.  அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது.  இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.

Sep_10_a

இன்று காலை முதல் பேருந்தில் பயணம் செய்தவர்கள் “கருணாநிதி எவ்வளவோ தேவலாம்” என்ற வார்த்தையைக் கேட்டிருக்க முடியும்.   மக்களின் புலம்பல் கொஞ்ச நஞ்சம் இல்லை.   நேற்று பால்விலை, பேருந்துக் கட்டணம் மற்றும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணங்களை தெரிவித்த, ஜெயலலிதா மனம் உருகும் வகையில் தொலைக் காட்சியில் பேசினார்.

போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.  எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.  2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு  ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.

போக்குவரத்து

119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில  போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?

 நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.  மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 Omni_Bus_12m_Zonda_B6

அண்டை மாநிலமான கர்நாடகாவில் இயக்கப் படும் வெளியூர் பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் இயக்கப் படுகின்றன.   சென்னையிலிருந்து பெங்களுருக்கு விடப்படும் ராஜஹம்ஸா என்ற வகைப் பேருந்துகள், மிகச் சிறப்பாக செயல்படுவதால், பெங்களுர் செல்வதற்கு பயணிகள் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

aa

இப்போது கட்டணத்தை உயர்த்திய பிறகு, தனியார் பேருந்துகளின் ஆதிக்கத்தை குறைத்து அரசுத் துறை பேருந்துகள், தனியார் பேருந்துக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.  தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் அரசியல் பலத்தோடு உள்ளனர்.   அரசின் அனுமதி இன்றி, ரகசியமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் மற்றும் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர் தலைமையில் நடந்த வசூல் வேட்டையைப் பற்றி சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.

 பேருந்து போலவே, தனியார் பால் உற்பத்தியாளர்களிடமும், மன்னார்க்குடி கும்பல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே வசூல் வேட்டையில் இறங்கி மன்னார்குடி மாபியாவுக்கு வசூலித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோவையில் உள்ளாட்சித் துறையின் கீழ் பாதாள சாக்கடை தொடர்பான பணியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  இந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது திமுக அரசில்.  அப்போது கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த அன்சுல் மிஷ்ரா என்ற இளம் அதிகாரி, ஒப்பந்தக் காரர்களை அழைத்து, யாருக்கும் ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டாம், கொடுக்கவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

 புதிய அரசு பொறுப்பற்றதும், மூன்று மாதங்களுக்கு முன், டி.கே.பொன்னுச்சாமி என்ற ஐஏஎஸ் அதிகாரி கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் படுகிறார். ஒப்பந்தக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முடிந்தவுடன் ரன்னிங் அக்கவுண்ட் என்ற முறையில் பணம் கொடுக்க வேண்டும்.  இவ்வாறு பணம் கொடுப்பதற்கு முன்பாக, வேலைகள் எப்படி நிறைவேற்றப் பட்டுள்ளன  என்பதை பொறியாளர்கள் சான்றளிக்க வேண்டும்.  பொன்னுச்சாமி கோவை மாநகராட்சி ஆணையராக ஆனதும், மாதந்தோறும் கொடுக்கப் படும் பணம் நிறுத்தப் படுகிறது.  ஒவ்வொரு மாதமும் காண்ட்ராக்டருக்கு வழங்கப் படும் பணம் 2 கோடி ரூபாய்.

 மாநகராட்சி அலுவலகத்தை அணுகியதும், அந்த அலுவலகத்தில் இருந்த லட்சுமணன் என்ற உதவிப் பொறியாளர், நீங்கள் கோவை மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணியை பார்த்து விட்டு வாருங்கள்.   பிறகுதான் உங்கள் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று கூறுகிறார்.  அமைச்சரை நேரடியாக சந்திக்க முடியுமா ?  மூலவரைப் பார்த்த பிறகுதானே உற்சவரை பார்க்க வேண்டும்…..  மூலவர் யாரென்றால், அமைச்சரின் தம்பி சங்கர் என்பவர். அவரை சந்தித்ததும், கட்சி நிதியாக 40 லட்ச ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார்.   40 லட்ச ரூபாயைக் கொஞ்சம் குறைத்து 37 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள்.   மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பங்குக்கு 5 லட்சம் கறக்கிறார்கள்.   அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

Augu---24-ze

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் பட்டதும் மீண்டும் உதவிப் பொறியாளர் லட்சுமணனை சந்திக்கின்றனர்.    அவர், “சார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியையும் பார்த்து விடுங்கள். அவர்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு” என்கிறார்.   அமைச்சர் முனுசாமியை கிருஷ்ணகிரி சுற்றுலாத் துறை பங்களாவில் வைத்துப் பார்க்கிறார்கள்.  பார்த்ததும், ஏற்கனவே வேலுமணிக்கு பணம் கொடுக்கப் பட்ட விபரத்தை சொல்லுகிறார்கள்.   வேலுமணி ஏன், என்னுடைய துறையில் பணம் வாங்கினார் என்று ஆச்சர்யப்பட்ட முனுசாமி, சரி எனக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், நீங்கள் செல்லலாம்.  பணம் கொடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார். முனுசாமியின் பி.ஏ சேகர் என்பவர், கோவை மாநகராட்சி கமிஷனரிடம் தொலைபேசியில் பணத்தை வழங்குமாறு தெரிவித்ததும் அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

Untitled-2

டி.கே.பொன்னுச்சாமி, ஐஏஎஸ்

அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் படுகிறது.  மீண்டும் ப்ரோக்கர் லட்சுமணனை அணுகியதும், அவர் மேயர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  அவரையும் பார்த்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார்.  இந்தச் சூழலில் பொறுமை இழந்த காண்ட்ராக்டர், “சார் நான் தொழில் நடத்துவதா இல்லையா… என்னுடைய வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா …  என்று சத்தம் போடுகிறார்.  சத்தம் போட்டவுடன், பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய கோப்பை தலைமை கணக்கு அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள் (சிஏஓ). அவரை சென்று சந்தித்ததும், நீங்கள் அனுப்பிய பட்டியலில் ஏராளமான பிழைகள் இருக்கிறது, அதனால் நிறைய தாமதம் ஆகும் என்று தெரிவித்து விடுகிறார்.

 இதனால் விரக்தி அடைந்த காண்ட்ராக்டர், பேசாமல் வேலையையே நிறுத்தி விடலாமா என்று புலம்புகிறார்.

 ஆட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்த வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகக் கூறும் ஜெயலலிதா, இது போல நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தினாலே, அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறும் ஜெயலலிதா, முதலில் அந்த அறிவுரையை தன்னுடைய உயிர்த் தோழிக்கு கூறினால், தமிழக மக்கள் இந்தப் பிரம்படியிலிருந்து தப்பிப் பிழைப்பார்கள்.





தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், குவைத் – 25.11.2011

27 11 2011

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார்.

தோழர்.தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து முனு.சிவசங்கரன் அவர்கள் மாவீரர்நாள் உறுதிமொழி செய்துவைத்தார்கள்.

தொடர்ந்து, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களின் மாவீரர்நாள் அறிக்கையினை தொழிலதிபர் சாமி வெளியிட பொறியாளர் இராமன் அவர்கள் பெற்றுக்கொண்டர்கள்.தோழர். சிவமணி, தோழர்.பகலவன் ஆகியோரின் எழுச்சிமிகு மாவீரர்நாள் கவிதையினைத் தொடந்து, தோழர்.முனு.சிவசங்கரன் அவர்களும் தோழர்.பின்னலூர் மணிகண்டன் அவர்களும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய பொறியாளர் முத்து அவர்கள், இலங்கை விமானத்தில் பயணிப்பதை புறக்கணிக்கவும், எதிரிகளின் பொருட்கள் தயாரிப்புக்களை புறக்கணிக்கவும் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சியான உரைநிகழ்த்தினார்கள்.இதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து இணையம் வழி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகு அவர்கள் மாவீரர்நாள் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்து பொறியாளர் இராமன் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார்கள்.தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் இணையம் வழி மாவீரர்நாள் உரையாற்றினார்கள்.தொடர்ந்து தோழர்கள் இரகுநாதன், தோழர். பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் எழுச்சிமிக்க கவிதையோடும் தோழர் செந்தில்குமார், தோழர்.மாதவன், கவிஞர் தோழர் வித்யாசாகர் அவர்கள் உணர்வுமிக்க கவிதையோடும் பொறியாளர் சேகர் அவர்களும் உரையாற்றினர்.அடுத்து, தினமலரைப் புறக்கணிப்போம் என்றக் கோரிக்கையோடு உறுதிமொழி ஏற்றிவைக்க, தோழர் செல்லம்மா வித்யாசாகர் அவர்கள் முதல் ஒப்பம் இட்டு தொடங்கிவைக்க பங்கேற்ற அனைவரும் ஒப்பம் இட்டார்கள்.இறுதியாக, தோழர் வின்சென்ட் அவர்கள் உரையாற்றினார்கள். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பில் உருவாக்கப்படும் தோழர்.செங்கொடி நினைவுமண்டப பணிகளுக்கு கொடைஅளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தோழர். தமிழ்நாடன் முன்வைக்க பலரும் முன்வந்து கொடைநல்கினர்.

This slideshow requires JavaScript.

தனது குடும்பத்தார் படித்துவந்த தினமலர் நாளிகையினை நிறுத்தச்செய்த தோழர் குமரேசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவையில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.  மிகுந்த எழுச்சியோடும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் இராசேந்திரன், செந்தில் ஆகியோரும் தோழர்.செயபாலன், தோழர். பிரான்சிசு சீசர், தோழர். சிவராமகிருட்டிணன், தோழர். நடராசன், தோழர் கருப்பசாமி, கவிஞர் தமிழ்க்காதலன், ஓவியர் கொண்டல்ராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் புகைப்படங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

https://picasaweb.google.com/112864862706759070212/MaaveerarNaal2011

த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் தியாகு, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு.உருத்திராபதி சேகர் ஆகியோரின்

காணொளி இணைப்பை இங்கு காணலாம்:

http://www.youtube.com/user/thamizhnadan?feature=mhsn

குவைத் தமிழர் கூட்டமைப்பு

மூன்றுயிரைக் காப்பதே முதன்மையாகக் கொள்வீர் உலகத் தமிழரே!

தினமலர் இதழை புறக்கணிப்பதே தமிழனின் கடமையாகக் கொள்வீர்!

சுப்பிரமணியன்.நா
www.tamilanmanian.wordpress.com





பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டார் ராஜீவ் காந்தி

27 11 2011

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது.பலாலி காங்கேசன்துறை பண்டத்தரிப்பு யாழ். கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் மற்றும் விமானத் தரையிறக்கம் கடல் மூலமான தரையிறக்கம் என்று பல முனைகளில் இருந்தும் யாழ் குடாவைக் கைப்பற்றும் அந்த நடவடிக்கை மிகவும் மூர்க்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நான்கு நாட்களில் நிறைவு பெற்றுவிடும் என்று எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 45 நாட்கள் வரை நீடித்தது.இலங்கையின் சரித்திரத்திலேயே அதுவரை இடம்பெற்றிராதவாறு 35 நாட்டகள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த 35 நாட்டகளும் மக்கள் வெளியே நடமாடுவதற்கு இந்தியப் படையினர் அனுமதிக்கவில்லை. தமது வீடுகளை விட்டு வெளியே வந்த அனைத்துப் பொது மக்களும் போராளிகளாகவே இந்தியப் படையினரின் கண்களுக்குத் தென்பட்டார்கள்.

அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி மூதாட்டியாக இருந்தாலும் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே என்ற எண்ணத்தில்தான் இந்தியப் படையினர் செயற்பட்டார்கள்.கண்களில் பட்டவர்களையெல்லாம்அவர்கள் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படையினக்கு ஏற்பட்ட ஆரம்பகட்ட இழப்புக்களும் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளும் இப்படியான ஒரு மனநிலையை இந்தியப் படையினரிடம் ஏற்படுத்தியிருந்தாலும் வெளியில் நடமாடுபவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்ற ஒரு எண்ணமும் இந்தியப் படையினரது மனங்களில் விதைக்கப்பட்டிருந்தது.வெளியில் நடமாடுபவர்கள் சுடப்பட வேண்டியவர்கள் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள். அவ்வாறு வெளியில் நடமாடுபவர்களைக் கொலை செய்யலாம் என்ற உத்தரவும் மேலதிகாரிகளினால் சாதாரண இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான 35 நாள் ஊரடங்குச் சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் எவ்வாறு தாங்கிக்கொள்வது என்றோ அவர்கள் உணவிற்கு எங்கே போவார்கள் என்றோ வருத்தம் வாதை ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றோ இந்தியப் படையினர் துஞ்சற சிந்திக்கவேயில்லை.அவர்கள் சிந்திக்கும் நிலையிலும் விடப்படவில்லை.உத்தரவுகளை கண்களை மூடிக்கொண்டு கடைப்பிடிக்கும் வகையில்தான் இந்தியப் படையினர் பயிற்றப்பட்டிருந்தார்கள். இந்தியப் படையினரின் பயிற்சிகளின் போது மேலதிகாரிகளின் உத்தரவுகளை இயந்திரத்தனமாக பின்பற்றும் பயிற்சிகளையே இந்தியப் படையினர் அடிப்படையில் பெற்றிருந்தார்கள். அதனால் அந்த உத்தரவுகளுக்கு அமைய தமிழ் மக்கள் விடயத்தில் இந்தியப் படையினர் மிகவும் கொடுரமாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள்.

இந்தியப் படையினரின் பயிற்சிகள்:

நான் இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டிருந்த போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பாக இந்திய இராணுவத்தின் ஒரு பயிற்சி மையம் இருந்தது. இந்தியப் படையினர் இலங்கைக்கு வருவதற்கு முந்திய காலம் அது. கடைசியில் இந்தியப் படையினரே இலங்கைக்கு வந்து ஈழத்தை மீட்டுத் தருவார்கள் என்று அனேகமான ஈழத் தமிழர்களைப் போன்று நானும் நினைத்துக் கொண்டிருந்த காலம். அதனால் இந்தியப் படையினர் அந்த பயிற்சி மையத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் சிரிப்புக்கள் அவர்களது விளையாட்டுக்கள் அனைத்துமே எங்களுக்கு புளகாங்கிதத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்தன.

அங்கு இடம்பெறுகின்ற பயிற்சி நடவடிக்கைகளை நானும் என்னுடன் தங்கியிருந்த ஈழத் தமிழ்மானவர்கள் சிலரும் ஆவலுடன் அவதானித்து வருவது வளக்கம். பயிற்சியில் ஈடுபடும் இந்திய இராணுவத்தினர் ஒரு நிலத்தை பண்படுத்தி அழகான பூக்கன்றுகளை நட்டு சிறிது காலம் பராமரிப்பார்கள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பூக்கன்றுகளை முற்றாக அகற்றிவிட்டு அந்த இடத்தை இறுக்கமான தரையாக மாற்றி தார் ஊற்றி ஒரு தளமாக மாற்றுவர்கள். இரண்டு மூன்று நாட்களின் பின்னர் மறுபடியும் அந்த தளத்தை உடைத்து பதப்படுத்தி மீண்டும் பூக்கன்றுகளை நடுவார்கள். இவ்வாறு மாறிமாறி ஒரே இடத்தை வெவ்வேறு நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். அதுவும் ஒரே குழுவினரே இந்தக் காரியங்களைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

இந்திய இராணுவ வீரர்களின் இந்தச் செயல் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவதாகவே இருக்கும். தாரிலும் சீமேந்திலும் தளம் அமைப்பதானால் பின்னர் எதற்காகப் பூக்கன்றுகளை நடவேண்டும்?. பூக்கன்றுகளை நடுவதானால் எதற்காக தரையை கெட்டியாக்கவேண்டும்? இதுபோன்ற பல கேள்விகள் எங்களிடையே உலாவந்தவண்ணமே இருக்கும்.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பமும் எங்களுக்கு ஒரு நாள் கிடைத்தது. இந்தியப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கும் அந்த அதிகாரியுடன் கதைக்கும் சந்தர்ப்பம் திடீரென்று எங்களுக்குக் கிடைத்தபோது அந்த பயிற்சியின் காரணம் பற்றி நாம் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அந்த அதிகாரி “இது ஒரு முக்கியமான இராணுவப் பயிற்சி முறை. சாதாரண இராணுவ வீரர்கள் விழைவுகள் பற்றி எதுவுமே யோசிக்காது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை மட்டுமே கடைப்பிடிக்கும் நிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்வதற்கான உளவியல் முறைப்பயிற்சியே அது.

இராணுவ வீரர்கள் தமது மேலதிகாரிகளினால் வழங்கப்படும் எந்த ஒரு உத்தரவிற்கும் எதற்கும் யோசிக்காது கீழ்ப்படியும் ஒரு கட்டுப்பாட்டை பயிற்றுவிப்பதற்கே இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்திய இராணுவத்தினர் அவர்களது சப்பாத்துக்களின் அடிப்பாகங்களைக்கூட பாலிஸ் செய்து மினுக்கிவைக்கவேண்டும். இது உத்தரவு. அப்படிப் பாலிஸ் செய்யப்பட்ட சம்பாத்துக்களை அணிந்து ஒரு அடி வைத்தாலேயே அதன் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருக்கும் பாலிஸ் முற்றாக அழிந்துவிடும்.

ஆனால் அதுபற்றி அந்த இராணுவ வீரன் சிந்திக்கக்கூடாது. கட்டளைகள் எப்படியானதாக இருந்தாலும் அவன் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்” என்று அங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி முறைகளுக்கு அந்த உயரதிகாரி விளக்கம் அளித்தார்.

இந்திய சீன யுத்தத்தின் போது மேலிடத்தில் இருந்து சண்டை செய்யவேண்டாம் என்று கிடைத்த ஒரு தவறான உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நூற்றுக்கணக்கான இந்தியப்படை வீரர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட நிகழ்வையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

ஆக இந்தியப் படைவீரர்கள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளின் அடிப்படையிலேயே எந்தக்காரியங்களையும் செய்யும் ஒரு தரப்பினர் என்பதில் சந்தேகம் இல்லை.

யாருடைய உத்தரவு?

அப்படியானால் 35 நாள் ஊரடங்குச் சட்ட காலத்தில் கண்களில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படியான நடவடிக்கையும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நெறிப்படுத்திக்கொண்டிருந்தவர் என்ற வகையில் இந்தியாவின் பிரதமர் காலம் சென்ற ராஜீவ் காந்தி அவர்களே ஈழத் தமிழர்கள் மீது இந்திய ஜவான்கள் மேற்கொண்ட அனைத்துக் கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும்.ஏனெனில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியாக கிடைக்கப்பபெற்ற உத்தரவுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரஜீவ் காந்தி நெறிப்படுத்திய இராணுவ நடவடிக்கைகள்:

இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டன என்பது பற்றி இந்தியப் படைகளின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் அவர்கள் The IPKF in Sri Lanka என்ற தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

களமுனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரிகேட் படையணியும் டிவிசன் தலைமையகத்தினால் நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த டிவிசன் தலைமையகங்கள் சென்னையிருந்த HQ OFC, IPKF என்ற அமைதிப்படைத் தலைமையகம் பூனேயில் இருந்த தென்பிராந்திய இராணுவத் தலைமையகம் (GQ Southern Command)  மற்றும் டில்லியிலிருந்த இந்திய இராணுவத் தலைமையகம் (Army HQ)  என்பனவற்றில் இருந்து உத்தரவுகளை பெற்றுச் செயற்பட்டன.புதுடில்லியில் இருந்த அரசியல் வட்டாரங்களும் இராணுவத் தலைமையகத்துடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தது.

உள் விவகார அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சரவை செயலாளர் முப்படைத் தளபதிகளின் உதவியாளர்கள் RAW, NIB போன்றனவற்றின் பொறுப்பாளர்கள் தகவல் அதிகாரிகள் போன்றவர்களுடன் முக்கியமாக பிரதம மந்திரியின் அலுவலகம் எமது நடவடிக்கைகள் தொடர்பான நெறிப்படுத்தல்களில் நேரடி அங்கம் வகித்தன.தினமும் காலை மாலை இரண்டு தடவைகள் இவர்கள் கூடி ஆராய்ந்து இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். இராணுவத்தினர் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பணிப்புரைகளையும் வழங்குவார்கள்.எமது நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகளை வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திரு பார்த்தசாரதி நடாத்தி வந்தார். அவரது இந்த நடவடிக்கைகள் எமக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.|| இவ்வாறு திபீந்தர் சிங் இந்தியப் படை தொடர்பாக எழுதியிருந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கள முனையில் நடைபெற்ற அனைத்து விபரங்களும் உயர்மட்டம் வரை உடனடியாகவே அனுப்பப்பட்டு வந்தன. அந்த உயர் மட்டம் என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவாகும்.ஆக மொத்தத்தில் ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நேரடியாக நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

ராஜீவின் மனநிலை:

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு பாடம் படிப்பித்தேயாகவேண்டும் என்ற வெறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இருந்ததாக அப்பொழுது அவருடன் நெருங்கிப் பழகிய பலர் பின்னர் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை புதிதாக ஏற்றிருந்த ராஜீவ் காந்தி ஒரு கௌரவம் மிக்க புரட்சித் தலைவராக உலகில் வலம் வர ஆரம்பித்திருந்த அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் அடி வாங்குவது அவருக்கு பாரிய ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இருந்தது. அவர் சிறிலங்கா அரசுடன் செய்துகொண்டிருந்த சர்வதேசப் புகழ் வாய்ந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லை என்பது அவரால் ஜீரனித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இலங்கையில் அமைதி திரும்பப் பாடுபட்ட ராஜீவின் பெயர் அமைதிக்கான அடுத்த நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படவேண்டும் என்று இந்தியப் பத்திரிகைகள் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுவருகையில் புலிகள் அவருக்கு ஒத்துழைக்காதது ராஜீவை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக ராஜீவ் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவுடன் சுவீடனில் உள்ள போர்போஸ் ஆயுதக்கம்பணி போன்ற பாரிய ஆயுதக்கம்பனிகளிடம் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இந்தியாவை ஒரு வல்லரது ரேஞ்சுக்கு கோண்டு செல்லுவதாக பம்மாத்துக் காண்பித்துக்கொண்டிருந்த போது இலங்கையில் ஒரு சிறு போராளிக் குழுக்களிடம் இந்தியப் படை மரண அடி வாங்கிக்கொண்டிருப்பது ராஜீவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதுவும் பாக்கிஸ்தான் சீனா போன்ற எதிரி நாடுகளை தனது இராணுவ பலத்தைக் கொண்டு இனிமேல் மிரட்ட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது பற்றியும் அவருக்கு கவலையாக இருந்தது. இவை அனைத்திற்கும் காரணமான புலிகளை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியில் இந்தியப் படை என்ன செய்தாவது புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற உத்தரவை இந்திய இராணுவத்திற்கு வழங்கியிருந்தார்.

பிரபாரணை கொல்லுங்கள்

அதுமாத்திரமல்ல இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்லவேண்டும் என்ற உத்தரவை தன்னிடம் ரஜீவ்காந்தி பிறப்பித்திருந்ததாக மேஜர் ஜெனரல் ஹரிக்கிரத்சிங் பின்நாட்களில் தெரிவித்திருந்தார். 1987 செப்டெம்பர் நடுப்பகுதியில் இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவென பலாலித் தளம் வரவிருந்த பிரபாகரனை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவை பிரதமர் ரஜீவ்காந்தி பிறப்பித்ததாகவும் தான் அந்த உத்தரவை ஏற்க மறுத்ததாகவும் பின்நாட்களில் அவர் எழுதிய சுயசரிதையில் ஹரிக்கிரத் சிங் தெரிவித்திருந்தார்.

(In September 1987, a political dialogue between the LLTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the [Interim Administration Council] was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by Dixit, was 16-17 September 1987.”

“On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the [Overall Forces Commander]. Lt. Gen. Depinder Singh.”

“Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasizing that I would not obey his directive.”

“I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He Rajiv Gandhi has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’” )

ரஜீவ் காந்தியே பொறுப்பு

புலிகளிடம் தமக்கு ஏற்பட்டிருந்த ஆரம்ப தோல்விகளுக்கு பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி இந்தியப் படைகள் அதிகம் அக்கறைப்பட்டதே காரணம் என்று இந்தியப் படை அதிகாரிகள் பின்நாட்களின் சப்பைக்கட்டு கட்டியிருந்தார்கள்.

அதேவேளை என்ன விலை கொடுத்தாலும் பறவாயில்லை. பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டாலும் பறவாயில்லை. புலிகளை வெற்றிகொண்டுவிடவேண்டும்: அதுவும் உடனடியாக அதைச் செய்யவேண்டும் என்று ராஜீவ் உத்தரவு பிறப்பிறப்பித்திருந்ததையும் பின்நாட்களில் அவர்கள் ஊடகங்களுக்கு ஒப்புகொண்டிருந்தார்கள ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார்.அதனை இத்திய இராணுவத்தினர் கடைப்பிடித்தார்கள்.

எனவே ஈழத் தமிழர்கள் மீதான இந்தியப் படைகளின் படுகொலைகளுக்கு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி பொறுப்பேற்றேயாகவேண்டும்.உரும்பிராயில் ஓடிய இரத்த ஆறுசரி. இனி கள முனைக்குச் செல்வேம்.உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடாக இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது.ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் அத்தியாயம் ஒன்றை இரத்தத்தால் எழுதுவதற்காக இந்திய ஜவான்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.

நன்றி –நிராஜ் டேவிட்





எம் தலைவர் பிரபாகரன் – அறம் வழி நின்ற சான்றோன்…

26 11 2011
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலை இய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல-
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் ..

– புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர்
தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர்.. எதிர்காலம் குறித்த மாறா நம்பிக்கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக்குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்ம அறப் பலத்தோடு நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர்.
ஒரு பேரழிவிற்கு பின்னால்..சாம்பலாய் கருகிய ஒரு இனம்..சுதந்திர வேட்கையும் ,இன மான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிருட்டி..உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான சுதந்திரத்தினையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க துவங்கி உள்ளனர் என்பதற்கு அறிகுறிகளாக உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக்கின்றன. ஒரு தொன்ம அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு முழி பிதுங்கி நிற்கின்ற நிலைமையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.
தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க் காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகவினையும், போர்க் களத்திற்கு அனுப்பிய தாய்,காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி ,குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும் ,குறியீடுமாய் திகழும் நம் இலக்கியங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும் , அறமும், இரக்கமும்,ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந்திருக்கின்றன.வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப் பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடீத்து வந்திருக்கிறது என்பதனை உணர்த்துகிறது. எதிரியிடம் கூட நாம் நாகரீகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் தொன்ம இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.
உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக்காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான் தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது.
ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரீகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியை கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.
வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம்.
இந்த பூமிப் பந்தெங்கும் வன்னி முகாம்களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடுகளின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரைகளுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்ம அறத்தின் தொடர்ச்சியாய் தலைவரும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது.
செஞ்சோலை குழந்தைகளை கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும் நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.
ஒரு இனம் வீழ்வதும் ..பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு.பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்ட வில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க சித்தமாக இருந்ததை நாம் அறிகிறோம்.அதற்கு உதாரணமாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக் கரங்களின் ஊடாக தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.
தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக்கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழ் தொன்மத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங்கிய ஒரு மனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு.பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்லமாக உருவெடுத்தது.
ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக,போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ்விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக,போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணிகளுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பரிமாணங்களில் தமிழ்த் தேசியத்தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.
எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லை
-1991 மாவீரர் தின உரையில்..
மேதகு. பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக் காரர் இல்லை . மாறாக ஆன்ம உறுதியோடு சுதந்திர வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங்கள் ஊடாகவும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம்பரிய விதைகள் மூலமாக இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவுணர்ச்சிதான் போர் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான ஆன்ம உறுதியாக உருவெடுத்தது.
எங்கள் இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம்.எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம்.(1984-ல் அனிதா பிரதாப்பிற்கு அளித்த பேட்டியில் )

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் ஹிட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை சமைத்தார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஈழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தே தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிகமாகவே விலை கொடுத்து விட்டோம். நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற கவனப்பாடு நம் மனதில் என்றும் வேண்டும்.

தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களை காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி,பொருளாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத்துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி..ஆர்ப் பரிக்கும் மக்கட் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையை தக்க வைப்பதுதான் நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.
கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தே தீருவோம். தமிழர்கள் ஒருவருகொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்லுவோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய தேசிய தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்லுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்





பறை மொழி அறிதல்..

25 11 2011
அடி விழ… அடி விழ
அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

நன்றி : தோழர் .மணி செந்தில் 





முல்லைப் பெரியாறு அணை – உடைகிறது ஒருமைப்பாடு!

25 11 2011

‘‘தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப்பொருட்கள் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையும், கொப்பரையும் பயிர் செய்யும் மலையாளிக்கு, அரிசி முதல் அத்தனையும் தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்துக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட, தமிழக விவசாயிகளுக்குத் தர மறுக்கும் கேரள அரசை கண்டனம் செய்கிறேன்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்டி, தமிழக விவசாயிகளுக்கு மேலும் நெருக்குதல் தர திட்டமிடுகிறது கேரளம். காவிரி, பெரியாறு, பவானி என சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல், தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச்செயல்களுக்கும் மத்தியில், நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதையும் அருகாமை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் தமிழனின் உயர்ந்த குணம்…’’

– கேரளாவின் அடுக்கடுக்கான அத்துமீறல் நடவடிக்கைகள் கண்டு கொந்தளித்து வெடித்த நமது குமுறல் வார்த்தைகள் அல்ல இவை. மலையாள மொழியின் ஆகச்சிறந்த எழுத்தாளரும், தேசிய அளவில் குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதியும், சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவருமான பால் சக்காரியாவின் வார்த்தைகளே இவை. பால் சக்காரியா மட்டுமல்ல… மனச்சாட்சி உள்ள மலையாளிகள் அத்தனை பேரின் குரலும் இதுவே.

கேரளம் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு அமைந்த உலகின் முதல் நிலப்பரப்பு என்ற பெருமை அதற்கு உண்டு. ‘எல்லாமும்… எல்லோருக்கும்’ என்ற உலக சகோதரத்துவம் பேசும் உயர்ந்த கம்யூனிசக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து, குறுகிய இன, மொழிவாத அரசியலாக கம்யூனிசத்தை மாற்றிய தோழர் கூட்டம் வாய்க்கப்பெற்ற பெருமையும் அந்த மாநிலத்துக்கே சொந்தம்.

முல்லைப் பெரியாறு என்கிற ஒரு அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 1979ம் ஆண்டில் இருந்து அந்த மாநில அறிவுஜீவிகள் அடித்து வரும் கூத்து… ஜனநாயக, சகோதரத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாதது. தமிழகத்தின் சிவகிரி மலைப்பகுதியில் பெரியாறு நதியாக உற்பத்தியாகி, தமிழக நிலப்பரப்புக்குள் 16 கிமீ தூரத்துக்கு ஓடி முல்லை ஆற்றுடன் கலந்து… முல்லைப் பெரியாறு அணையாக இருக்கிற அந்த நிலப்பகுதியும் ஒரு காலத்தில் தமிழகத்துக்கு சொந்தமானதே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கிற காலத்தில் நடந்த நயவஞ்சக நாடகங்கள், அந்த மலைப்பிரதேசங்களை நம்மிடம் இருந்து நகர்த்திச் சென்று விட்டன. 

தென் தமிழகம் பாலைவனமாகாமல் காப்பாற்றும் மிக உன்னத நோக்கத்தில் தனது சொந்த சொத்துக்களை விற்றுச் சேர்த்த பணத்தில், கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கில பொறியாளரால் 1886ல் துவங்கி, 1895ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. உலகின் மிகச்சிறந்த கட்டுமானப்பணிகளின் ஒன்றாக, இன்றளவும் மதிக்கப்படுகிறது. அந்த அணை பலவீனமாகி விட்டது. எந்த நேரமும் உடைந்து பல லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கும் அபாயம் உருவாகி விட்டது என்ற கூக்குரல் முதன்முதலில் ஒலிக்கத் துவங்கியது 1979ம் ஆண்டில்.

அதற்கு மிக முக்கியக் காரணமும் இருக்கிறது. கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு 50 கிமீ தொலைவில் இடுக்கி அணை கட்டப்பட்டது. 1970ல் திட்டமிடப்பட்டு 1976ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட நீர் மின்திட்ட அணை இது. கட்டி முடிந்ததும், ‘இடுக்கி நீர் மின்திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக, கேரள அரசின் மின் உற்பத்தி அளவு 150 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.

முல்லைப்பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பிரமாண்டமான இடுக்கி அணையை கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது…. அணையை நிரப்புகிற அளவுக்கு நீர்வரத்து இல்லை என்கிற விஷயம். முழு அளவில் நீர் மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. அப்போதுதான், கேரள அரசியல்வாதிகளின் பார்வை அப்பாவி முல்லைப்பெரியாறு அணை மீது திரும்பியது. அதை உடைத்து தகர்த்து விட்டால், அங்கு சேரும் தண்ணீரை அப்படியே, இடுக்கி அணைக்கு திருப்பி விடலாம். எந்தக்காலத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

அதன் பிறகு ஆரம்பித்தது கேரள அரசின் நிலநடுக்க நாடகங்கள். திடீர், திடீர் நில நடுக்கங்களால் முல்லை பெரியாறு அணை பலவீனமாகி விட்டது. எந்த நேரமும் உடைந்து விழுந்து விடும். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் பல லட்சம் அப்பாவி மக்கள் ஜலசமாதி ஆகிவிடுவார்கள் என அடுக்கடுக்காய் கதைகளை அள்ளி இரைக்க ஆரம்பித்தார்கள். உச்சக்கட்டமாய், தோழர் அச்சுதானந்தன் முதல்வராக இருந்த காலத்தில், அணை உடைந்தால் அழிவு எப்படி இருக்கும் என கிராபிக்ஸ் படம் தயாரித்து, குறுந்தகடுகளை வீடு, வீடாக விநியோகம் செய்து இனப்பகையை மக்கள் மனதில் விதைக்கிற பணியை ஆரம்பித்தார்கள்.

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிற நச்சுக்கருத்தை மலையாள மக்கள் அனைவரது மனதிலும் விதைக்கிற பணியை கம்யூனிஸ்ட்டுகளும் சரி; காங்கிரஸ், பாரதிய ஜனதா என நீக்கமற சகல அரசியல்கட்சிகளும் சிரமேற்கொண்டு செய்யத் துவங்கினர். ஏறக்குறைய அதில் வெற்றியும் பெற்று விட்டனர். இன்று முல்லைப்பெரியாறு அணையை, தங்கள் உயிருக்கு உலை வைக்கிற அணு உலையாக கருதுகிற மலையாள மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம். 

அரசியல்வாதிகள், அதிகாரிகள் அந்த வேலையைச் செய்வதைக் கூட சகித்துக் கொள்ளமுடிகிறது. ஆனால்… இனம், மொழி என்கிற கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட, கருத்து சுதந்திரப் பிதாமகன்களான கலைத் துறையினரும் அந்த கேவலமான சிந்தனைகளுக்கு ஆட்படுவது ஆபத்தான விஷயம். சோகன்ராய் என்கிற மலையாள சினிமா இயக்குனர்…. உருவாக்கியுள்ள ‘டேம் 999’ என்ற சினிமா, முல்லை பெரியாறு என்ற அணையை அல்ல; இந்திய ஒருமைப்பாட்டை உடைப்பதற்காக வைக்கப்படுகிற வெடி என்றால், அது மிகைப்படுத்துதல் அல்ல. 

நச்சுக்கருத்துக்களை தாங்கிப் பிடிக்கிற அந்த சினிமாவின் டிரெய்லரை பார்க்கிற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. துப்பாக்கியை எடுத்து தனக்குத்தானே தலையில் சுட்டுக் கொண்டு சாகிற செயலும், இந்த அணையை விட்டு வைக்கிற செயலும் ஏறக்குறைய ஒன்று என்று தெள்ளத்தெளிவாக தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார் சோகன்ராய். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மொழி, இனபேதங்கள் கூடாது என்பது உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிற மாண்பு. ஆனால், மலையாள சகோதரர்கள் அந்த மாண்புகளை மறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

நடிகர் கமலஹாசனுக்கு கேரள அரசு நடத்திய பாராட்டு விழாவின்போது, ‘மலையாள நடிகர்கள் ஆயிரம் பேர் இருக்க, தமிழனுக்கு பாராட்டு விழாவா’ என்று ஒருமைப்பாட்டை உடைத்துப் போடுகிற தீக்கங்குகளை அள்ளிக் கொட்டி… மம்முட்டி, மோகன்லால் துவங்கி அத்தனை நடிகர்களும் அந்த விழாவை அடியோடு புறக்கணித்த சம்பவம் நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அது. தமிழகத்துடனான முல்லைப்பெரியாறு அணையின் 999 ஆண்டுகால ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டும் விதமாக ‘டேம் 999’ என பெயரிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியா முழுமைக்கும் தடை செய்யப்படுவதே ஒருமைப்பாட்டுக்கு உகந்த விஷயம்.

இந்த சினிமாவை அனுமதித்தால், அது ஏற்படுத்துகிற பின்விளைவுகள் ஆபத்தானதாக அமைந்து விடும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கிற ஒரு விஷயம், கேரள அரசின் முழு ஆதரவுடன், பணம் மற்றும் பக்கபலத்துடன் தயாரிக்கப்படுகிறது என்றால், அரசியல் சாசனச் சட்டங்களின் மீது கேரளத்தவர்கள் வைத்திருக்கும் மரியாதையை யாரும் புரிந்து கொள்ளமுடியும். முதலில், இதுபோன்ற நச்சுக்குப்பைகளுக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுத்த புண்ணியவான்கள் மீது விசாரணை நடத்தவேண்டும்.

இன, மொழிவாத, கீழ்த்தர அரசியல் நடத்தும் மலையாள அரசியல்வாதிகள் தவிர, முல்லைப்பெரியாறு அணையின் பலத்தில் யாருக்கும் துளியளவும் சந்தேகம் இல்லை. நாட்டின் மிக உயர்ந்த அறிவியல் நிபுணர்கள், மத்திய நீர்வள கமிஷன் ஆய்வாளர்கள், சர்வதேச நிபுணர்களும் ஒருமுறைக்கு பல முறை ஆய்வு செய்து, அணை படு பலமாக இருக்கிறது என்று உறுதி செய்து விட்டார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் 2006 பிப்ரவரி 27ம் தேதி, ‘அணை மிகவும் பலமாக இருக்கிறது. நீர்மட்டத்தை 142 அடிக்கு தாராளமாக உயர்த்தலாம்’ என இந்தியாவின் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே தீர்ப்புக் கூறி விட்டது. 

கேரளாவும் தன்பங்குக்கு இன்றளவும் பல மாநிலங்களில் இருந்தும் நிபுணர்களை வரவழைத்து அணையை சோதனை செய்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஆய்வு முடிவுகளை இன்றளவும் பகிரங்கப்படுத்தவே இல்லை. படுத்தவும் முடியாது. காரணம், சுயநலமற்று, சொத்துக்களை விற்றுக் கட்டிய பென்னிகுக், பல தலைமுறைகளையும் கடந்து நிற்கிற அளவுக்கு பலமுள்ளதாய் கட்டி வைத்த அணை அது. அது பலவீனமாக, உடைந்து போகிற அளவில் இருக்கிறது என்று கேரள அரசியல்வாதிகள் தவிர, இதுவரை எந்த நிபுணருமே ஒரு வார்த்தை குறை கூறவில்லை. 

இறுதியாக சில விசயங்கள்….

கேரள அரசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்காமல் இருப்பது தமிழர்களின் பெருந்தன்மையே அன்றி, பலவீனம் அல்ல. யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்ற மிக உயர்ந்த மாண்புகளை மக்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது தமிழ் நாகரீகம்.நிலநடுக்கத்தால், முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்றால், அதற்கு 50 கிமீ தொலைவுக்கும் அருகாமையில் இருக்கிற இடுக்கி அணைக்கு ஆபத்து வராதா? நியாயமாக பார்த்தால், முல்லைப்பெரியாறு அணையை விட பல மடக்கு பெரியதான இடுக்கி அணைதான் கேரள மக்களுக்கும், இடுக்கி மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். அந்த அணை ஒருவேளை உடையுமானால், இடுக்கி மாவட்டத்தில் ஈ, எறும்பு கூட மிஞ்சாது. ஆகவே, கேரள அரசியல்வாதிகள், கடப்பாறையும் கையுமாக முதலில் செல்லவேண்டிய இடம் இடுக்கி அணை.

தவிர, அவர்கள் குற்றம் சாட்டுவது போல, முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், பல லட்சம் மக்கள் மாண்டு போவார்கள் என்கிற குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது. ஒரு பொய்யை உண்மையாக்கவேண்டுமானால், அதை திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும் என்கிற கோயபல்ஸ் தத்துவத்துவம் அது. கடல் மட்டத்தில் இருந்து முல்லைப்பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிறது. அது உடைந்தால் அழிந்து போகும் என சொல்லப்படுகிற நிலப்பரப்புகளான குமுளி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடி உயரத்திலும், வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடி உயரத்திலும், பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடி உயரத்திலும், ஏலப்பாறை 4 ஆயிரத்து 850 அடி உயரத்திலும் இருக்கின்றன.

இரண்டாயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிற அணை உடைந்தால், அதில் இருந்து வெளியேறுகிற தண்ணீர், 4 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இருப்பவர்களை மூழ்கடித்து, அழித்து விடும் என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்கள் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால், கேரள சகோதரர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். கீழே இருக்கிற தண்ணீர், 2 ஆயிரம் அடி மேலே எழுந்து போய், அங்கிருக்கிற மக்களை எப்படி அழிக்கமுடியும்? ‘காம்ரேட்’ அச்சுதானந்தன் தயாரித்த கிராபிக்ஸ் சி.டி.யிலும், சோகன்ராய் தயாரித்த ‘டேம் 999’ திரைப்படத்திலும் மட்டுமே அது சாத்தியம். 

அணையை உடைக்கிறேன்… அணையை உடைக்கிறேன் என்ற பெயரில், இந்தியாவின் ஒருமைப்பாட்டை உடைத்துப் போடுகிற முயற்சியில் இறங்கியிருக்கிற கேரள அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களை மத்திய அரசு தட்டி வைக்க இதுவே கடைசி வாய்ப்பு. இதையும் தவற விட்டால், அவர்கள் உடைத்தே விடுவார்கள்… அணையை அல்ல; ஒருமைப்பாட்டை!

– திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்