*12.பிரபாகரன்*

தம்பி! இன்று ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்? இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்? சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக்குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இதுவரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களவர் கையில். கடல் வழி உதவிகள் எல்லாம் தடுக்கப்பட்டு, கிளிநொச்சி நகரம் இப்போது சிங்களப் படைகளிடம்.

‘சத்ஜெய’ என்ற பெயரோடு கிளிநொச்சியைக் கைப்பற்ற சிங்களப் படைகள் போர் தொடங்கிய 1996-லும் கிளிநொச்சி இவ்விதமாகப் படையினர் வசமாகியிருக்கிறது. ஆனால், கிளிநொச்சிக்குள் நுழைந்த இராணுவத்தினரில் பெரும்பாலானோரால் கொழும்புக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில் கிளிநொச்சி மீண்டும் புலிகளின் வசமானது. ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் தாக்குதல் தொடுத்த புலிகளின் வெற்றி, ஆனையிறவு முகாமில் புலிக்கொடி ஏற்றப்படும் வரை தொடர்ந்தது. அதிலிருந்து தொடங்கியதுதான் சமாதான நடவடிக்கைகள். இன்றைய புலிகளின் பின்னடைவு, சமாதான காலத்திலிருந்தே தொடங்குகிறது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்தப் பெயரும் வைக்காமல், மக்களுக்கு அரசியல் தீர்வையும் புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி வன்னி மீட்புப் போரில் இறங்கி, கிளிநொச்சியை மீட்க இலங்கை அரசு இது வரை இழந்த படைவீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்

இங்கே குறிப்பிடத் தக்க விஷயம். முப்பத்தைந்தாயிரம் போராளிகளைக் கொண்ட புலிகள், கிளிநொச்சியைக் காக்க அனுப்பிய வீரர்கள், வெறும் இருநூறு பேர் மட்டுமே!

கிளிநொச்சி தமிழீழத்தின் வரவேற்பறை. . கடந்த பத்து வருடத்தில் அந்த நகரத்தின் விசாலமான வீதிகள் பிரபாகரனின் நேரடித் திட்டமிடலில் உருவானது. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு. அது வளம்பெற வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் கொட்டிக்கொடுத்த கோடிகளில் இருந்து உருவானது அந்த அழகான விவசாய பூமி.

புதிய கட்டடங்கள், புதிய தொழில்நுட்பங்கள், தேவைக்கு ஏற்றதை சொந்தமாக விளைவிக்கும் விவசாய நிலங்கள் என பத்தாண்டுகளில் கிளிநொச்சியை ஓர் உல்லாசபுரியாகவே உருவாக்கியிருந்தார் பிரபாகரன். உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத பாதுகாப்பு கிளிநொச்சியில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

ஆனால், கிளிநொச்சிக்குள் படைகள் நுழைந்தபோது புலிகளிடமிருந்து எவ்விதமான எதிர்ப்பும் இல்லை. நகரங்கள் காலியாகக் கிடந்தன. புலிகளின் விடுதிகளில் ஒரு டேபிள், சேர்கூட இல்லை. பழைய கலிபர் துப்பாக்கியைக்கூட இலங்கைப் படைகளால் அந்த நிர்வாக நகரத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. மக்கள் தங்களுடைய வீடுகளின் கதவுகள், ஜன்னல்களைக்கூட பெயர்த்தெடுத்துக்கொண்டு புலிகளோடு போய் விட்டார்கள். கிளிநொச்சியில் ஒருவர்கூட இல்லாதபடி அத்தனை புலிகளும் அவ்வளவு மக்களும் எங்கு போனார்கள் என்றால், அவர்கள் எங்கும் போகவில்லை. எங்கிருந்து புலிகள் தங்கள் போரைத் தொடங்கினார்களோ அங்கேயே போயிருக்கிறார்கள். திரும்பிவரும் ஆவேசத்தோடு! நான்காம் கட்ட ஈழப்போர் இனித்தான் தொடங்கப் போகிறது.

பிரபாகரன் இப்போது எங்கு இருக்கிறார்? அவர் மனைவி மதிவதனி, பிள்ளைகள், வயதான பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்? பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாவும் தமிழகத்தின் திருச்சியில் தங்கியிருந்தனர். நீண்ட காலமாக பெற்றோரைப் பார்க்காமல் கள முனையில் இருந்த பிரபாகரன், நோர்வே முன்னெடுத்த சமாதான காலத்தில், பெற்றோரை வன்னிக்கு அழைத்திருந்தார். வயதான காலத்தில் தன் அருகில் வைத்துப் பெற்றோரை கவனித்துக்கொள்ளும் ஆசையில் மகன் அழைக்க, அவர்களும் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போனார்கள்.

ரணில் ஆட்சி மாறி, ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோது, சமாதானத்துக்கு உலைவைக்கும் சூழல் ஏற்பட்டதும் பிரபாகரன் தன் பெற்றோரைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க விரும்பினார். ஆனால், பெற்றோரோ மகனை விட்டு விலகிச்செல்ல மறுத்துவிட்டனர். அந்தப் பெற்றோர் வன்னியில் இருந்த காலத்தில், அவர்களை மரியாதை நிமித்தமாகச் சென்று சந்தித்து, அடிக்கடி ஆசிவாங்கி வந்த ஒருவர் கருணா. துன்பம் சூழ்ந்த வேளையில் கருணாவின் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரபாகரனை விடவும் அதிகம் தவித்தது, அவரின் பெற்றோர்தான். இப்போதும் அவர்கள் பிரபாகரனுடனே இருக்கிறார்கள். ‘வாழ்வா? சாவா?’ என யுத்தத்தின் விளிம்பில் நிற்கும் தன் மகனுக்கு ஆறுதலாக அவர்கள் முல்லைத்தீவில் இருக்கிறார்கள். மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் தன் தலைவனின் பெற்றோரை தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றார்கள் புலி வீரர்கள். இப்போது மிக பாதுகாப்பான சூழலில், போராளிகளுக்கு மத்தியில் மகனோடு வாழ்கிறார்கள் அவர்கள்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது,
”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.

அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.

பிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார்.

திருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்! என விரிவாக சொல்லியிருக்கிறார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை! புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் ‘ஓபரேஷன் லிபரேஷனை’ தொடங்கியிருந்தது.

சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.

இந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி (சீலன்)யை மட்டும் களமுனையில் நிறுத்திவிட்டு, மற்ற இரண்டு குழந்தைகளையும் பிரிந்திருக்கிறார். புலிகளின் விமானப் படைக்கு முதல் வித்திட்ட சங்கரின் மரணத்துக்குப் பிறகு, பிரபாகரன் அந்தக் கனவை ஈடேற்ற மகனை நம்பியிருந்தார். இன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கொழும்பில் புலிகளின் விமானங்கள் காட்டியது ஒரு பகுதி வித்தையைத்தான். இன்று அவர்களிடம் ஆளில்லா உளவு விமானங்கள் இருக்கின்றன. தாக்குதல் விமானங்களும் இருக்கின்றன. இதை எல்லாம் சாத்தியமாக்கியது, சார்ள்ஸ் அன்டனி தலைமையிலான விமானப் படைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், அங்கிருந்தபடியே கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகவும் அல்லது ஆசிய நாடொன்றில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.

யுத்தமோ ஆக்கிரமிப்புகளோ அவரை வேதனைப்படுத்தவில்லை. துன்பம் சூழ்ந்த வேளைகளில் எங்கிருந்து பிரபாகரன் படை நடத்தினாரோ, அந்த முல்லைத்தீவின் மணலாறுப் பகுதியிலுள்ள அளம்பில் காடுகளும் இப்போது இராணுவத்தின் வசம். புலிப் பாய்ச்சலில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அளம்பில் காட்டில் எடுக்கப்பட்டதுதான் புலிக்குட்டியோடு பிரியமாக இருக்கும் பிரபாகரனின் படம். அந்தப் படத்தை எடுத்த கிட்டு இப்போது இல்லை. அளம்பில் காடுகளும் பிரபாகரன் வசம் இல்லை. விமானம் இருக்கிறது. போராடப் புலிகள் இருக்கிறார்கள். வரவேற்பறை வழியாக வீட்டின் கொல்லைப்புறத்துக்கே வந்து விட்டார்கள் சிங்கள இராணுவத்தினர். கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சி குறித்து சிங்கள தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னார்,

இந்தப் போர் துட்டகைமுனுவின் இறுதிப் போரான விஜிதபுர யுத்தத்துக்கு சமமானது! என்றார்.

ஆமாம், நான்காம் கட்ட ஈழப் போர் என்றழைக்கப்படும் இந்தப் போரில், தமிழ் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் முடிவை ஈழமக்கள் பிரபாகரனிடமே விட்டு விட்டார்கள்.

 

குவைதில் இருந்து சுப்ரமணியன்
நன்றி :ஜூனியர் விகடன்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: