சட்டக்கல்லூரி மாணவர் மோதல் – தொடரும் சாதி வன்மம்

கடந்த 12. 11. 2008 அன்று, சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களுக்குள் நடத்திக் கொண்ட கொலைவெறித் தாக்குதலைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து நாடே அதிர்ச்சியில் உறைந்தது. நெஞ்சை உலுக்கும் அளவிற்கு நடந்த அந்த மாணவர் ஆயுத மோதலை, மட்டரகமான தமிழ் திரைப்பட சண்டைக்காட்சி ஒன்றினைப்போல், திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, ‘வியாபாரம்’ செய்து கொண்டிருந்தன, தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள். நாட்டையே ‘குட்டிச்சுவராக்கிக்’ கொண்டிருக்கும் ‘சன்’ தொலைக்காட்சியும், ‘கள்ளர் சாதி’ அரசியலை தமிழகத்தில் தீவிரமாக வளர்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ‘ஜெயா’ தொலைக்காட்சியும், மோதல் நடந்த அன்றும் அதற்கு அடுத்த சில நாட்களிலும், நாளன்றுக்கு நூறு முறையேனும் அந்த மோதலை ஒளிபரப்பி, சமூகக் கொந்தளிப்பை உருவாக்கின. அநேகமாக அனைத்துத் தமிழ் நாளேடுகளும், வார இதழ்களும் மாணவர் ஆயுத மோதல் கட்சிகளை, பல வண்ணங்களில் அச்சிட்டு, ‘காசு’ பார்த்துக் கொண்டன.

கொலைவெறி பிடித்த ரவுடிகள் போல், மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை சென்னை, காவல்துறை உதவி ஆணையர் உட்பட, 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வேடிக்கை பார்த்து நின்றனர். மோதலைத் தடுத்து நிறுத்தும்படி பொது மக்களே புகார் கூறியும், காவல்துறை அதிகாரிகள் கொஞ்சமும் பதற்றமில்லை ‘வாளாவிருந்தனர்’ கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் மோதிக்கொண்டதால், கல்லூரி முதல்வர் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழைந்து, மோதலைத் தடுத்து நிறுத்த முடியாது என்று, மோதலை வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் கூறினர். மாணவர்கள் மோதிக்கொண்டதை தொடக்கம் முதலே தொலைக்காட்சி ஊடகங்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தும் கூட, காவல்துறை உயர் அதிகாரிகள் மோதலைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. சென்னை நகர காவல்துறை ஆணையரிடமிருந்தும், காவல்துறை தலைமை அதிகாரியிடமிருந்தும் ஆணை கிடைக்காததாலேயே மோதலைத் தடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று ‘வேடிக்கை’ பார்த்து நின்ற அதிகாரிகள் கூறினார்கள்.

தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட மாணவர் ஆயுத மோதல் காட்சிகளை பார்த்தத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அறிக்கை மேல் அறிக்கை விட்டு பரபரப்புக் காட்டினார்கள். அடிதடிகளையே தங்கள் வாழ்க்கையில் பார்த்திராதவர்கள் விடுக்கும் அறிக்கைகள் போல அவை இருந்தன. அறிக்கைகள் போதாது என்று, சட்டப்பேரவையிலும் மாணவர் மோதலைப் பற்றிய விவாதங்கள் நடந்தன. ஜெயலலிதா மற்றும் வைகோவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் கருணாநிதியைப் பதவி விலக வலியுறுத்தி வெளிநடப்புச் செய்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் முதல் நேற்று முளைத்த ‘விடுக்கு’கள் வரை வெளியிட்ட அறிக்கைகளும் கருத்துகளும் முதல்வர் கருணாநிதியைக் கொந்தளிக்கச் செய்தன.

 அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார் முதலமைச்சர். நடந்து கொண்டிருந்த சட்டக்கல்லூரித் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தார். சட்டக் கல்லூரிகளும், சட்டக்கல்லூரி மாணவர் விடுதிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன. மோதல் நடந்த சட்டக்கல்லூரி முதல்வர், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். மோதல் நடந்த இடத்தில் இருந்த போதிலும், மோதலைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காத காவல்துறை உதவி ஆணையரும், காவல்துறை ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் என காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கும்பலாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சென்னை நகர காவல்துறை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையர் நியமிக்கப்பட்டார். மோதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இத்தனை நடவடிக்கைகளை எடுத்தும் கூட, வைகோவும் ஜெயலலிதாவும் திருப்தியடையவில்லை. கருணாநிதி பதவி விலக வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள். ‘என்னைப் பதவி விலகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவும் வைகோவும் மாணவர்களிடையே மோதலைத் துண்டிவிட்டிருப்பார்களோ என எண்ணுகிறேன்’ என்று சொல்லுமளவிற்கு கருணாநிதியைக் கொதிப்படையச் செய்தார்கள். எனவே, முதலமைச்சரின் கோபம் இம்முறை மாணவர்கள் மேல் திரும்பியது. புதிதாகப் பதவியேற்ற சென்னை நகர காவல்துறை ஆணையர், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை ஒரே வாரத்தில் சட்டத்தின் முன்னால் நிறுத்துவேன் என முழங்கினார். மோதலில் ஈடுபட்ட தலித் மாணவர்கள் மீது மட்டும் கொலைமுயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பிடிக்கத் தமிழ்நாடு முழுவதிலும் காவல்துறை தீவிர நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட 20 மாணவர்களைப் பிடிக்க 25 தனிப்படைகளை உருவாக்கி, தமிழக வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார் சென்னை நகர புதிய காவல்துறை ஆணையர் கே. ராதாகிருஷ்ணன். கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்களின் இல்ல முகவரிகளை வாங்கிக்கொண்டு களத்தில் இறங்கின தனிப்படைகள். வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களை, சகோதர, சகோதரிகளை இரவோடு இரவாகப் பிடித்துக் கொண்டு வந்து கிளைச் சிறைகளில் ‘பிணை’களாக வைத்திருந்தனர். பிடித்துச் சென்றவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக்கூட தெரிவிக்கவில்லை. மாணவன் சரணடைந்தால் பெற்றோரை விடுவிக்கிறோம் என பேரம் பேசினார்கள் தனிப்படை காவல் அதிகாரிகள்.

பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு வழக்குத் தொடுக்கும் அளவிற்கு சட்டவிரோதமாகச் செயலாற்றி, வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறைப்பிடித்தனர் காவல்துறையினர். அதற்குள், சட்டக்கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக அறிக்கைகள் எழுதி எழுதி தமிழக அரசியல்வாதிகள் களைத்துப் போயிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதா மட்டும் விடுவதாக இல்லை. மாணவர்களுக்குள் மோதலைத் தூண்டிவிடுவதாகத் தன்மீது வீண்பழி சுமத்திய கருணாநிதி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார் ஜெயலலிதா. ‘விளையாட்டுக்குச் சொன்னேன்’ என்று கூறியும், ஜெயலலிதா ‘வழக்கு அறிவிப்பு’ அனுப்பியது கருணாநிதியை மேலும் ஆவேசமாக்கியது.

அன்றே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளதாக, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. அடுத்து ஜெயலலிதா என்ன செய்வார் என்று கவனித்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். ஜெயலலிதாவோ, சட்டக்கல்லூரி மாணவர் மோதலுக்காக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்பதில் இப்போது வரை உறுதியாக இருக்கிறார். அடுத்து என்ன அறிவிப்பு வருமோ என்று திகிலில் இருக்கிறார்கள் மாணவர்கள். உண்மையில், சட்டக்கல்லுரி மாணவர் மோதலில், வேறு எந்த அரசியல் கட்சித் தலைவரையும் விட அதிக பலன் அடைந்தது ஜெயலலிதாதான். ஒரு ‘அரசியல் நாட்டியத்தையே’ ஜெயலலிதா நிகழ்த்தினார் எனச் சொல்ல வேண்டும்.

குடும்ப அரசியலிலும், கூட்டணிக் குழப்பத்திலும் நிதானமிழந்து நிற்கும் கருணாநிதியே, மாணவர் மோதலுக்கும், மோதலை வேடிக்கை பார்த்து நின்ற காவல்துறையினரின் அலட்சியத்திற்கும் காரணம் என்று கூறும் ஜெயலலிதாவின் ‘திடலடி வாதம்’ சிந்தனைத்திறன் அற்ற தமிழக மக்களிடம் எடுபட்டுள்ளது. ஒருவேளை அதுவே உண்மையாகவும் இருக்கக்கூடும். ஆனால், மாணவர் மோதலை முன்வைத்து கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக ஜெயலலிதாவும் அவரது ‘ஜெயா’ தொலைக்காட்சியும் நடத்திய அரசியலும், மோதல் குறித்த பரப்புரையும் வேறு எதையும் விட ஆபத்தானது. சமூகப் பதற்றத்தை அதிகரிக்கக்கூடியது. அதைப் புரிந்து கொள்வதற்கு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்த உண்மைகளை நாம் விவாதிப்பது இங்கு அவசியமானதாகும்.

நூற்றைம்பத்தாண்டு கால வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நானூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த இக்கல்லூரியில் 1985க்குப் பிறகுதான் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக தலித் மாணவர்கள் சட்டம் படிக்க ஆர்வம் காட்டினார்கள். 1995க்குப் பிறகு அது மேலும் அதிகரித்து, பார்ப்பனர்களும் பிற உயர்சாதி இந்துக்களும் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அக்கல்லூரியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றினர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில் கல்லூரிகளில் படிக்க வந்த போதிலும், கிராமங்களில் சந்தித்து வந்த அதே சாதிய ஒதுக்குதல்களையும் ஒடுக்கு முறைகளையும் தலித் மாணவர்கள் சந்தித்தனர்.

சென்னை ஐஐடி உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. சென்னையில் இயங்கி வரும் அனைத்து கலைக் கல்லூரிகளும், புளுத்துப்போன தமிழக அரசியல் கட்சிகளின் இளைஞர் அணிக் கூடாரங்களாகவே திகழ்ந்து வருகின்றன. தமிழக அரசியலில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வரும் இடைநிலைச் சாதியம் கல்லூரிகளையும் விழுங்கி நிற்கிறது. சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, எப்போதும் ‘மாணவ ரவுடி’களின் குகையாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசியல்வாதிகள் தங்களின் விசுவாசமான சட்டம் தெரிந்த ரவுடிகளை இங்கேதான் தேர்வு செய்கிறார்கள். இங்கே படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தி. மு. க., அ. தி. மு. க. , காங்கிரஸ் போன்ற இடைநிலைச் சாதிக் கட்சிகளில் உறுப்பினர்களாவதில் பெரும் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிராமங்களில் சாதி ஆதிக்க உணர்வோடு வளர்த்தெடுக்கப்படும் இடைநிலைச் சாதி மாணவர்கள், அதே சாதி உணர்வுடன்தான் இங்கேயும் செயல்படுகிறார்கள்.

குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த மாணவர்கள், தங்கள் சாதி மாணவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். பிறசாதி மாணவர்களுடன் அவர்கள் பழகுவதில்லை. புதிதாகச் சேரும் மாணவர்களை, முதலில் அவர்கள் எந்த ‘சாதி’யைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டுதான் பழகுகிறார்கள். சாதியை வெளிப்படையாக கேட்க முடியாது என்பதால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு (கள்ளப் பெயர்) Code word வைத்துக் கொள்கிறார்கள். ‘கள்ளர்’ சாதிக்கு ‘சிங்கம்’, ‘வன்னியர்’ சாதிக்கு ‘காடுவெட்டி’, நாடார் சாதிக்கு ‘கேலக்ஸி’, போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இடைநிலைச் சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் தங்களின் சொந்த சாதி மாணவர்களுடன் சேர்ந்து கொள்வது போல், தலித் மாணவர்களும் தங்கள் சாதியினருடன் சேர்ந்து கொள்வதும் பழகுவதுமாக இருக்கிறார்கள்.

இச்சூழலில், கிராமங்களில் தலித் மக்களை ஏசி, பேசி வேலை வாங்கிப் பழகிய இடைநிலைச் சாதி மாணவர்கள், கல்லூரியிலும் அதே போல் நடக்க முயற்சிப்பதுதான் மோதலுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. அதே சாதி உணர்வுடன், விடுதிகளிலும் சாதி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார்கள். இத்தகைய சாதி ஆதிக்கப் போக்கும், ‘ரவுடி’ மனநிலையும் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே வேகமாக பரவி வளர்கிறது. ‘காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள்’ என்ற கருத்தும் மாணவர்களிடையே வளர்வதால், மிகச்சுலபமாக ‘ரவுடி’ மனநிலைக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் பலம் வாய்ந்த, தங்கள் சாதியைச்சார்ந்த அரசியல் கட்சித் தலைவரின் அறிமுகம் கிடைத்து விடுமானால், மாணவர்கள் ‘அரசியல் ரவுடிகளாகவும்’ மாற்றப்படுகின்றனர். இவ்வாறு வளர்ந்துவரும் மாணவ ரவுடிகள்தாம் பின்னாளில், தி. மு. க. , அ. தி. மு. க. , ம. தி. மு. க. , காங்கிரஸ் போன்ற புளுத்துப்போன கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் ‘மந்திரி’களாகவும் உருமாற்றப்படுகின்றனர். தி. மு. க. , காங்கிரஸ் கட்சிகளின் தற்போதைய மாநில, மத்திய அமைச்சர்களில் பலர் இவ்வாறு உருவாகி வந்த மாணவ ரவுடிகளே!

அப்படிப்பட்ட ‘மாணவ ரவுடி’களில் ஒருவர்தான் பாரதிகண்ணன். இவர்தான் சட்டக்கல்லூரி மாணவர் மோதலுக்கு முழுக்காரணமானவர். சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் கொலை வெறியுடன் கையில் கத்தியைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டபடி ஓடி வந்து சித்திரைச் செல்வன் என்ற தலித் மாணவரை கழுத்திலும் காதுப்பகுதியிலும் வெட்டிக்கொலை செய்ய முயற்சித்தார் பாரதி கண்ணன். கடந்த மூன்றாண்டுகளாக பாரதிகண்ணன் செய்து வந்த அட்டகாசங்கள் குறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. காரணம், தி. மு. க. விலும், அ. தி. மு. க. விலும் உள்ள சில இரண்டாம் கட்டத் தலைவர்களின் தொடர்புகள் அவருக்கு இருந்துள்ளன.

பாரதி கண்ணன் ‘கள்ளர்’சாதியைச் சார்ந்தவர் என்பதால், ‘கள்ளர்’ சாதி அமைப்புகளிடமும் அவர் அறிமுகமானவராக இருந்துள்ளார். பாரதி கண்ணன் தகப்பனார் கருப்பையா தேவகோட்டை, பழங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், கீழப்புலி என்ற கிராமத்தைச் சார்ந்தவர். அவ்வூரின் பஞ்சாயத்துத் தலைவராக மூன்றுக்கும் அதிகமான முறை பதவி வகித்துள்ளார். கண்டதேவியில் தலித் மக்கள் தேர் இழுக்கும் உரிமை கேட்டுப் போராடிய போது, பாரதி கண்ணனின் தகப்பனார் கருப்பையா, முன்னணி ஆளாய் நின்று தலித் மக்களுக்கு எதிராகச் செயலாற்றியவர். சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட ரூசோவின் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான சொர்ணலிங்கத்தின் நெருங்கிய நண்பர் இந்த கருப்பையா.

தேவகோட்டைப் பகுதியில், கருப்பையாவும் அவரது மகன் பாரதிகண்ணனும் செய்த சாதி ஆதிக்க வன்முறைகளுக்கு எதிராக பலமுறை அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டும், பாரதி கண்ணன் சட்டக்கல்லூரி மாணவர் என்பதால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்; வழக்குகள் பதிவாகவில்லை. காரணம் தேவகோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் கள்ளர் சாதியைச் சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகிறார்கள். எனவே சாதி ஆணவம் பிடித்த பல குற்றவாளிகள் விசாரணையின்றி விடுவிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய சாதி ஆணவப் பின்புலம் உடைய பாரதிகண்ணன், சட்டக்கல்லூரியில் அதே சாதி ஆதிக்க மனநிலையுடன் செயல்பட்டு வந்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை’ என்ற மாணவர்களுக்கான ‘சாதி’ அமைப்பை உருவாக்கும் அளவிற்கு பாரதிகண்ணனின் அரசியல் பின்னணி அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

பாரதிகண்ணனின் சாதி ஆதிக்கச் செயல்பாடுகளுக்கு அய்யாத்துரை, ஆறுமுகம், விஜய் பிரதீப் போன்ற இடைநிலைச் சாதி மாணவர்களும் தீவிரமாகத் துணைபோயுள்ளனர். விஜய் பிரதீப் என்ற ‘கள்ளர்’ சாதி மாணவர், மதுரை, மேலவளவில் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துக்களைப் படுகொலை செய்த கும்பலின் தலைவர் ராமரின் உறவினர் என்பதும், ‘என் பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடாதீர்கள், மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதல் அக்யூஸ்ட் ராமர் என் சித்தப்பா’ என்று கூறி தலித் மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார் என்பதும் (உண்மை அறியும் குழு அறிக்கை) சட்டக் கல்லூரியில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்கப் போதுமான ஆதாரங்களாகும்.

சென்னை, சட்டக்கல்லூரி வரலாற்றில் இதுவரை நடக்காத ‘தேவர் ஜெயந்தி’ விழாவைக் கல்லூரியில் நடத்தியதும், விழாவிற்கான துண்டறிக்கையில் ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி’, என அச்சிடாமல், ‘சென்னை அரசு சட்டக்கல்லூரி’ என்று அச்சிட்டதும் எந்த பின்னணியில் நடந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் மாபெரும் தலைவரின் பெயரை ஒரு அரசு நிறுவனத்தின் பெயர் பலகையிலிருந்து அழித்துவிடத் துணியும் இடைநிலைச் சாதி சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி வெறியும், அவர்களின் பின்னால் நிற்கும் சாதி ஆதிக்க சக்திகளின் பலமும் தமிழ்நாட்டு மக்களின் சமூக ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?

விடுதியிலும், கல்லூரியிலும் பல்வேறு தீண்டாமைக் குற்றங்களைச் செய்த போதிலும் பாரதி கண்ணனின் அட்டகாசங்களை சகித்துக் கொண்டனர் தலித் மாணவர்கள். ஆனால், தேர்வு எழுதவிடாமல் தடுத்து, தங்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்த எண்ணும் கொடுந்தீய சாதிவெறியை எதிர்கொள்ளுவதைத் தவிர தலித் மாணவர்களுக்கு வேறு என்ன வழி இருக்க முடியும்? தலித் மாணவர்கள் செய்த தவறுகள் என எதையும் மோதலில் ஈடுபட்ட இடைநிலைச் சாதி மாணவர்கள் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர்கள் அச்சிட்ட துண்டறிக்கைகளில் சாதிய உணர்வுடன் டாக்டர் அம்பேத்கரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த முயற்சித்தது தலித் மாணவர்களின் தவறல்ல. உண்மையில் அதைக் கல்லூரி நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், கள்ளர் சாதி அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய பாரதி கண்ணனின் சமூக விரோதச் செயல்களை கல்லூரி நிர்வாகம் வேடிக்கை பார்த்தது.

மோதல் நடைபெற்ற நாளில், பாரதிகண்ணனும் அவரது நண்பர்கள் அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் நுழைந்து, தலித் மாணவர்களைக் கொலை செய்ய முயன்றனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, கல்லூரியையும் உயர்நீதிமன்ற வளாகத்தையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் அருகே பாரதிகண்ணன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்ததை பலர் பார்த்துள்ளனர். பல நாட்களாகவே பாரதி கண்ணன் கத்தியுடன் கல்லூரிக்கு வந்த போவதை கல்லூரி ஆசிரியர்கள் பலர் அறிந்துள்ளனர். எனவே, பாரதிகண்ணன் கொலைவெறியோடு அலைந்துள்ளார் என்பது உறுதியாகிறது.

சம்பவம் நடந்தபோது, சித்திரைச் செல்வனை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த பிறகே தலித் மாணவர்களை பாரதி கண்ணன் அடித்து நொறுக்கினர். ஆறுமுகமும், அய்யாத்துரையும் பாரதி கண்ணனோடு சேர்ந்து கொண்டு தலித் மாணவர்களைக் கொலை செய்வதற்கே கல்லூரிக்குள் நுழைந்துள்ளார். காரணம், அன்று பாரதி கண்ணனுக்குத் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. அவர் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியமுமில்லை.
நடந்த உண்மைகள் இவ்வாறு இருந்தும், தமிழ்நாட்டின் மொத்த ஊடகங்களும் பாரதிகண்ணனை அப்பாவி போல் சித்தரித்தன. அவரது சாதி மற்றும் அரசியல் பின்புலங்களை நன்றாக அறிந்திருந்தும் அதைப்பற்றி ஊடகங்கள் எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. மூடி மறைத்தன.
மோதலை நேரடியாகப் படம் பிடித்த ‘ஜெயா’ தொலைக்காட்சி குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வந்ததே, பாரதிகண்ணன் கொடுத்த முன் தகவலினடிப்படையில்தான்.

பாரதி கண்ணன் கத்தியுடன் ஆவேசமாகப் பாய்ந்து செல்வதையும், சித்திரைச் செல்வனை வெட்டிப் படுகாயம்படச் செய்வதையும் முதல் நாள் ஒளிபரப்பில் வெளியிட்ட ‘ஜெயா’ தொலைக்காட்சி. மறுநாள், அதை மறைத்து தலித் மாணவர்கள் தாக்குவதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. ‘கள்ளர்’ சாதி மாணவர் தாக்கப்படுவதை மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதன் மூலமும், அதை எதிர்த்து ஜெயலலிதா விடும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வாசித்துக் காட்டுவதன் மூலமும், ஜெயலலிதாவும், அவரது ‘ஜெயா’ தொலைக்காட்சியும் ‘தாங்கள் யார்’ என மீண்டும் மக்களுக்கு அறிவித்துள்ளன.

கடந்த இருபதாண்டு காலமாக தமிழக அரசியலில் வெளிப்படையான ‘கள்ளர் சாதி’ அரசியல் நடத்தி வரும் ஜெயலலிதா, சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் ஆவேசமடைந்து பெரும் அரசியல் நாட்டியமே நடத்தினார் என்று சொல்ல வேண்டும். ‘கள்ளர் சாதி’ அரசியலில் கருணாநிதி தன்னை முந்திவிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிகம் கவனமுடன் செயலாற்றுகிறார் என்பதை அவரது அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இதர சாதிகளுக்கு எதிரான, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கள்ளர் சாதி அரசியலை, தமிழகத்தின் பொது அரசியல் போக்காக மாற்றத் துடிக்கும் ஜெயலலிதாவின் அரசியல் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்காகத் தனி வேலைத் திட்டத்துடன் ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஜெயலலிதாவின் கள்ளர் சாதி ஆதரவு அரசியல், தமிழகத்தில் மீண்டும் சாதிக் கொந்தளிப்பை உருவாக்குமே தவிர அமைதிக்கு வழி வகுக்காது.

அதேபோல், குடும்ப அரசியல் போட்டியில் கருணாநிதியுடன் வெளிப்படையான எதிரிகளாக அப்பொழுது இருந்து (இப்பொழுது கூடி குலாவும்) ‘மாறன் பிள்ளைகள், சட்டக்கல்லூரி மாணவர் மோதலை, மிகப்பெரும் சட்டம் ஒழுங்குச் சிக்கலாக்கும் இழிவான எண்ணத்துடன் ‘சன் தொலைக்காட்சியில்’ செய்திகளை ஒளிபரப்பினர். மதுரையில் ‘தினகரன்’ நாளேட்டின் அலுவலகம் சூறையாடப்பட்ட வன்செயலையும் சட்டக்கல்லூரி மாணவர் மோதலையும் ஒப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும் தமிழகத் காவல்துறை செயலிழந்து நிற்கிறது என்றும் அறிவித்தது சன் தொலைக்காட்சி. மிக மட்டகரமான சமூக அக்கறையுள்ள வியாபார ரவுடிகளிடம் செய்தி ஊடகங்கள் இருந்தால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு ‘சன் நெட்ஒர்க்கும்’ அதன் அனைத்து இதழியல் ஊடகங்களுமே உதாரணம்.

ஊடகவியல் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நாகரீகத்தைக்கூட சன் தொலைக்காட்சி பின்பற்றுவதில்லை. அநேகமாக தமிழகத்தில் முன்னணி நாளேடுகளாகவும், வார இதழ்களாகவும், வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்துமே சாதிய, மதவாத நச்சுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி செய்திகளை மூடிமறைத்தும் அல்லது பெரிதுபடுத்தியும் வெளியிடும் கீழ்த்தரமான இழிசெயலைச் செய்து வருகின்றன. சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்திலுமே அத்தகைய கொடுமை தொடர்ந்தது. வணிக ஊடகங்களைக் கையில் வைத்திருக்கும் பார்ப்பன, இடைநிலைச் சாதியினரும், அத்தகைய ஊடகங்களில் பணியாற்றும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேர்மையற்ற, சாதித் தீண்டாமைக் கொள்கையுடையவர்களாகவும் இருப்பதே அதற்குக் காரணம்.

இரக்கமற்ற முறையில் சமூகப் புரிதலோ, அக்கறையோ இல்லாமல் செய்திகளை ஒளிபரப்பும், வெளியிடும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசு உருவாக்க முன்வரவேண்டும். பெரு வணிகப் பின்னணியில் இயங்கும் ஊடகங்களுக்கு சமூக, அரசியல் செய்திகளை வெளியிடத் தடை ஏற்படுத்தப்பட வேண்டும். தரத்திற்கும் தன்மைக்கும் ஏற்றவாறு ஊடகங்களைப் பிரித்து, எவை, எவற்றை ஒளிபரப்பலாம், வெளியிடலாம் என்ற விதிமுறைகள் கடுமையான சட்டப் பின்னணியுடன் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கவில்லையெனில், இன்னும் சிறிது காலத்தில், கேடுகெட்ட இந்திய ஊடகங்கள் இந்திய நாட்டுக்கே எதிரிகளாக மாறி நிற்கும்.

எடுத்துக்காட்டாக, சட்டக்கல்லூரி மாணவர் மோதல் திரும்பத் திரும்ப தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பியதால்தான், தமிழகம் முழுவதும் சமூகக் கொந்தளிப்பு உருவானது. பேருந்துகள் உடைக்கப்பட்டன. உசிலம்பட்டி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்மாவட்டங்களில் பல கிராமங்களில் சாதி மோதல் உருவாகின. ஜெயா மற்றும் சன் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒரு வாரமாக மாணவர் மோதலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதால்தான், அந்த சாதி மோதல்கள் உருவாகின. ‘ஜெயா’வையும் ‘சன்’தொலைக்காட்சியையும் தடை செய்ய அரசிடம் சட்டம் எதுவுமில்லை. அத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சட்டம் படிக்க வந்த மாணவர்கள் தங்களுக்குள் கொலை ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதை காவல்துறை உயர் அதிகாரிகளே வேடிக்கை பார்த்து நின்றதை தமிழக அரசியல்வாதிகள் பெரிதும் கடிந்து கொண்டனர். ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு ஏற்றபடி, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி மாவட்டச் செயலாளர்கள், அவர்கள் சாதியைச் சேர்ந்த முக்கியப்புள்ளிகள், தொழிலதிபர்கள், கட்டப் பஞ்சாயத்துசெய்து பிழைக்கும் ரவுடிகள் ஆகியோருக்கு ஏற்றபடியும், தங்களின் சொந்த சாதி வெறியுணர்வின்படியும், பாகுபாட்டுணர்வுடன் இயங்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினர், சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் மட்டும் துடிப்புடன் இயங்குவார்கள் என எண்ணுவது குறை அறிவுடையோரின் செயல்பாடாகவே இருக்கும்.

ஊழலிலும், சுய நல வெறியிலும், எதேச்சதிகாரப் போக்கிலும் தமிழகக் காவல்துறையை மிஞ்ச எவருமில்லை. சட்டக்கல்லூரி மாணவர் மோதலை மட்டுமல்ல, அதைவிட பல மடங்கு பதற்றத்தை ஏற்படுத்தும் படுகொலைகள் நடந்தபோதும் கூட காவல்துறையினர் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை இடைநிலைச் சாதி வெறியர்கள் சூறையாடும் போதும், படுகொலை செய்யும் போதும், வேடிக்கை பார்த்து நின்ற கதைகள் ஏராளமாக உள்ளன. பல இடங்களில் காவல்துறையினரே சூறையாடியுள்ளனர். ஆளும் கட்சியினர் நடத்திய பேரணிகளில், மாநாடுகளில் நடக்கும் அத்தனை அட்டகாசங்களையும் வேடிக்கை பார்த்து நின்றவர்கள்தாம் தமிழகக் காவல் துறையினர். அப்போதெல்லாம் வாய் மூடிக் கிடந்த தமிழக அனைத்துக் கட்சி அரசியல் தலைமைப் புள்ளிகள், சட்டக்கல்லூரியில் கள்ளர் சாதி மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர்.

‘உள்ளே நுழைய வேண்டாம் என்று உயரதிகாரிகள்’ கூறிய பின்பும், வேடிக்கை பார்ப்பதைத் தவிர அங்கிருந்த காவலர்களுக்கு வேறு என்ன வழி இருக்க முடியும். இத்தனைக்கும் ஏற்கனவே சென்னை கமிஷனராக முத்து கருப்பன் இருந்த பொழுது சட்டக் கல்லூரி விடுதியில் புகுந்து காவலர்கள் தாக்கியது தொடர்பாக அமைக்கப்பட்ட பக்தவச்சலம் கமிஷன், காவலர்கள் கல்லூரியில் பிரச்சனை என்றால் உள்ளே நுழைய தடை இல்லை என்றும் அதை கல்லூரி முதல்வர் வலியுறுத்த வேண்டும். அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

ஒருவேளை, மோதல் நடந்து கொண்டிருந்தபோது காவலுக்கு நின்றிருந்தவர்கள், மோதலைத் தடுக்கக் கல்லூரிக்குள் நுழைந்திருப்பார்களேயானால், இதே அரசியல்வாதிகள், முதல்வர் கருணாநிதி சொன்னதைப்போல, ‘காவலர்கள் கல்லூரி முதல்வர் அனுமதி இன்றி உள்ளே நுழைந்தது தவறு’ என்று அறிக்கை விட்டிருப்பார்கள். வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
ஆனாலும், வேடிக்கை பார்த்து நின்றதற்காக முதல்வர் கருணாநிதி காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளார். கல்லூரி முதல்வரை நீக்கியுள்ளார். பலரை இடமாற்றம் செய்துள்ளார். விசாரணை ஆணையத்தை நிறுவியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மாணவர் மோதல் நடந்ததால், மற்ற அரசியல் கட்சியினர் எழுப்பிய கூக்குரலுக்குப் பயந்து மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார் கருணாநிதி.

அவரது நடவடிக்கைகள் ஒருவேளை, அரசியல் நெருக்கடியிலிருந்து அவரை தப்புவிக்கச் செய்யக்கூடும். ஆனால், அரசியல்வாதிகள் கோரிக்கையாக எழுப்பாத இன்னொரு நடவடிக்கையும் கருணாநிதி எடுத்துள்ளார். மோதலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் கல்லூரியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார். தலித் மாணவர்கள் மீது மட்டுமே கொலை முயற்சி உட்பட சிக்கலான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலித் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்ததற்காகவும், கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும், பல நாட்களாக கொலை ஆயுதத்துடன் கொலை செய்யும் நோக்கில் அலைந்ததற்காகவும் சித்திரைச் செல்வன் என்ற தலித் மாணவரை கத்தியால் வெட்டி படுகாயமுறச் செய்ததற்காகவும், இடைநிலைச்சாதி மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மேற்கண்ட குற்றங்களுக்காக மோதலில் ஈடுபட்ட இடைநிலைச் சாதி மாணவர்கள் மீதும் பாரதி கண்ணன் மீதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின கீழ் கொலைமுயற்சி உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் மூலமே பாகுபாடற்ற நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுத்தார் என்பது புலனாகும். ஆனால் இன்றுவரை அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தலித் மாணவர்கள் மீது மட்டும் பல மோசமான வழக்குகளைப் பதிவு செய்து, இரவோடிரவாக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ளோரை பிணையக் கைதிகளாகப் பிடித்து வந்து வன்கொடுமை செய்தது காவல்துறை. காவல்துறையின் அத்தகைய சட்ட விரோதமான போக்கைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கருணாநிதியால் பேச முடியவில்லை. காரணம், ‘கள்ளர் சாதி’ அரசியலை முன்னெடுக்கும் ஜெயலலிதாவை முந்த வேண்டும் என்ற அவரது எண்ணம்தான். தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றி மறைந்த பிற சாதித் தலைவர்களுக்கு தனது தலைமைச் செயலகத்திலோ, அல்லது சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைக்கோ மாலையணிவித்து மரியாதையை முடித்துக்கொள்ளும் தி. மு. க. அமைச்சர்கள், முத்துராமலிங்கம் ஜெயந்திக்கு பசும்பொன் வரை பயணம் செய்து அஞ்சலி செலுத்துகிறார்கள். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவிற்கு பல கோடி ரூபாயை ஒதுக்கிய கருணாநிதி, பசும்பொன் வரை நேரில் சென்று வணங்கிவிட்டுத் திரும்பினர்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், ‘கள்ளர் சாதி’ அரசியலை தமிழகத்தில் தீவிரமாக்கும் முயற்சியில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும்போட்டி நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பெரியார் வழியில் வந்த பேரியக்கங்கள் என்று மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் தி. மு. க. , அ. தி. மு. க. கட்சிகளின் சந்தர்பவாத சாதி அரசியல் ஒழித்துக்கட்டப்பட்டால் ஒழிய தமிழகத்தின் எதிர்கால அரசியல் போக்கு உருப்படப்போவதில்லை.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைப் புள்ளிகள் விடுத்த அறிக்கைகளின் மூலமோ, மாணவர் மோதலுக்குப் பிறகு கருணாநிதி எடுத்த பிற்போக்கு இடைநீக்க நடவடிக்கைகளின் மூலமோ, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியிலிருந்து நீக்கியதன் மூலமோ கல்லூரிகளில் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி வன்மத்தை தமிழக அரசால் தடுத்துவிட முடியாது. உண்மையில், இத்தகைய நடவடிக்கைகள், மேலும் மேலும் சாதி வெறி உணர்வை அதிகரிக்கச் செய்யவே உதவும். சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் சாதியக் கொந்தளிப்பை தடுத்து நிறுத்தி, மக்களிடையே சமூக ஜனநாயகத்தை உருவாக்கும் ஏராளமான தத்துவங்களையும், கோட்பாடுகளையும், செயல்முறைகளையும், புத்தர் முதல் அம்பேத்கர் வரை எண்ணற்ற பெருந்தகைகள் வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.

அவற்றையெல்லாம் இந்திய ஆட்சியாளர்களில் ஒருவரேனும் வாசித்தறிந்ததாகத் தெரியவில்லை. முன்னோடிகளின் வழிகாட்டுதல்களை எதையும் அறிந்துகொள்ளாமல், ஆயிரம் ஆண்டுகாலச் சாதிய மோதல்களுக்குத் தீர்வைக் கொண்டு வந்து விட முடியும் என்று எண்ணும் ஆட்சியார்கள், எத்தகைய மடமைவாதிகளாக இருப்பார்கள்? சாதிய மோதல்களைத் தடுத்து நிறுத்த, சமூக அக்கறை கொண்ட, ஆழமான, அர்ப்பணிப்புமிக்க, நீண்டகால நடவடிக்கைகள் தேவை. அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் அளவிற்கு, அடிப்படை சமூக அறிவற்றவர்களாகவே தமிழக அரசியல்வாதிகள் இருந்து வருகிறார்கள். தேர்தல் அரசியல் மூலம் பதவிக்கு வந்து சுகபோக பிழைப்பு நடத்துவதே அவர்களின் நோக்கம்.

இந்து இதிகாசப் புரட்டுகளால், மடமை வாய்ந்த பழமை இந்தியச் சமூகம் உருவாக்கிய சாதிப்பிரிவுகளை, ஏற்றத்தாழ்வுகளை இன்றுவரை பின்பற்றி வரும் சாதிய சமூகத்தின் துல்லியமான வெளிப்பாடுதான் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மோதல். உலகளாவிய அளவில் மக்கள் ஜனநாயக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்ட பின்னரும், உலகின் மாபெரும், மகத்துவமிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் தடைசெய்துள்ள சாதியத் தீண்டாமை நடைமுறைகளைப் பின்பற்றுவோர் மீது, ஆட்சியார்கள் மிகக் கடுமையான நீண்டகால நடவடிக்கைகளை எடுக்காத வரை, சமூகத்தில் நிலவிவரும் சாதியக் கொந்தளிப்பு குறையப் போவதில்லை.

Advertisements

One response

19 11 2013
joseph

Good report to every one.Please avoide caste fight.Every one to equal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: