03 * அன்புச் சகோதரி தமிழ்நதி

அன்புச் சகோதரி தமிழ்நதி

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலக மக்களையெல்லாம் அன்பு செய்த எம் தமிழினம் இன்று அகதிகளாக உலகெங்கும் சிதறிப் போயுள்ளது. ‘எங்கள் சகோதரி’ என அறிமுகப்படுத்த வேண்டிய எம்குலப் பெண்ணை ‘ஈழ அகதி’ என்று அடையாளம் காட்டும் துயரத்தோடு, எழுத்தாளர் தமிழ்நதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தபோது, அங்கிருந்து வெளியேறி கனடாவில் சில காலம் வாழ்ந்து, பின்பு தமிழ்நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதி மூலம் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றவர். அண்மையில் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. தமிழ்நதியைப் பற்றி மேலும் சில கூறுவதற்குப் பதிலாக, அவரது கவிதையே அவருக்கு சிறந்த அறிமுகமாக இருக்கும் என்பதால் அவரது கவிதை ஒன்றை இங்கு தருகிறோம்.

tamilnathy

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படி அறிவித்தல் கிடைத்தது.

நல்லது ஐயா!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்.

போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
கவிஞர்கள்
தம் கடைசிக் கவிதையை
எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
‘ஜனநாயகம்… ஜனநாயகம்’ என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க…
நவீன சித்திரவதைகளில்
சிறையதிகாரிகள் பயிற்சி பெற…
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும்
குடுவைகளில் சேகரிக்க…
நகக்கண்களுக்கென ஊசிகள்
குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்…
கால்களுக்கிடையில் தூவ
மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
மேலும் சில இசைக்கருவிகள்
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

மறந்தே போனேன்
எங்களைக் கைவிட்டவர்கள்
தேர்ந்த சொற்களால்
இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.

நாங்கள் கேட்கும்
அவகாசத்தை வழங்கி
தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.

நன்றி : கீற்று

 

Advertisements

2 responses

22 03 2009
rehkajasmin

என் அன்புச்சகோதரியே,
வளர வாழ்த்துக்கள்.

22 03 2009
tamilanmanian

அன்புள்ளதிர்க்கு வணக்கம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்து தோற்றுவிட்டேன் காரணம் . சாட்டிங் பிரச்சனையாக உள்ளது ஜி-மெயில் தொடர்பு கொள்ள முடியுமா ? tamilan.manian@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: